இந்தியா, ஜப்பான்
இந்தியா, ஜப்பான் twitter
உலகம்

முன்னேறிய ஜெர்மனி.. சரிவை நோக்கி ஜப்பானின் பொருளாதாரம்! என்னதான் ஆச்சு உழைப்பாளர்களின் நாட்டிற்கு?

Prakash J

சரிவைச் சந்தித்த ஜப்பான்

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில், இந்தியா 5வது இடத்தைக் கொண்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில், உள்நாட்டு மொத்த உற்பத்தி (GDP) அடிப்படையில், வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஜப்பான் 3ஆம் இடத்தில் இருந்துவந்தது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்தநிலை காரணமாக தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து 4வது இடத்திற்குச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியா 5வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளில் ஜப்பானின் பொருளாதாரம் சரிந்துள்ளது.

2023ல், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 591.48 டிரில்லியன் (4.2 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது. ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.3 சதவீதமாக ஆக வளர்ச்சி கண்டுள்ளது.

இது 4.12 டிரில்லியன் யூரோக்கள் (4.46 டிரில்லியன் டாலர்) ஆக உள்ளது. ஜப்பானில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக உணவு, எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்து, அவற்றின் நுகர்வு 0.2 சதவீதமாக குறைந்துள்ளது. ஜப்பானின் எரிபொருள் தேவையில் 94 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதிக்கான செலவு கூடி இருப்பதன் காரணமாக பொருளாதாரத்தில் மந்தநிலை நிலவுகிறது.

மேலும், ஒரு தசாப்தத்திற்குமுன் 2வது இடத்தை சீனாவிடம் ஜப்பான் பறிகொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2022 மற்றும் 2023 ஆண்டுகளில், அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய யென் (Yen) கரன்சியின் மதிப்பு முறையே 18 சதவீதம் மற்றும் 7 சதவீதம் என சரிந்தது.

ஜப்பானின் சரிவுக்குக் காரணம் என்ன?

ஜப்பானின் மத்திய ரிசர்வ் வங்கியான பேங்க் ஆஃப் ஜப்பான் (Bank of Japan), வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்திற்கும் குறைவாகவே வைத்துள்ளதால், கரன்சியின் மதிப்பு பெரிதும் குறைந்தது. மேலும் ஜப்பானில், அண்மைக்காலமாக, மக்கள்தொகை எண்ணிக்கை குறைவு, முதியோர் அதிகரிப்பு, தம்பதியர் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விரும்பாமை, அனைத்துத் துறைகளிலும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு ஆகிய காரணங்களால் உள்நாட்டு உற்பத்தி பெரிதும் குறைந்துள்ளது.

இந்தியா

இந்தச் சூழ்நிலையில், அதிகரித்துவரும் இளைஞர்களின் எண்ணிக்கையாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாலும், இந்தியா, இந்த தசாப்தத்திற்குள் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து 3ஆம் இடத்தை பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியல்

1. அமெரிக்கா

2. சீனா

3. ஜெர்மனி

4. ஜப்பான்

5. இந்தியா

6. இங்கிலாந்து

7. பிரான்ஸ்

8. இத்தாலி

9. பிரேசில்

10. கனடா