உலகம்

பூமியை நோக்கி வரும் 4.கி.மீ பருமன் கொண்ட விண்கல்... பூமிக்கு ஆபத்தா?

webteam

பூமிக்கு மிக நெருக்கமாக 4 கி.மீ பருமன் கொண்ட ராட்சத விண்கல் அடுத்த மாதம் கடந்து செல்லவிருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் 3000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மனிதர்களை மேலும் பீதியடைய வைக்கும் விதமாக ஏப்ரல் 29- ஆம் தேதி அன்று ஒரு சம்பவம் நிகழவுள்ளது.

அது என்னவென்றால் கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் பருமன் கொண்ட விண்கல் பூமிக்கு மிக நெருக்கமாக கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல் புவியின் ஈர்ப்புக்குள் சிக்காமல் கடந்து சென்றுவிடும் என்பதால், மனிதர்களுக்கோ, நாடுகளுக்கோ எந்த ஆபத்தும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு மணிக்கு 31 ஆயிரத்து 320 கிலோ மீட்டர் வேகத்தில் பூமிக்கு நெருக்கமாக இந்த விண்கல் வந்து கொண்டிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று, பூமிக்கு நெருக்கமாக விண்கல் ஒன்று கடந்து சென்றது. நல்வாய்ப்பாக பூமியில் மோதாமல் அந்த விண்கல் நகர்ந்து சென்றது.