srilanka x page
உலகம்

இலங்கை | பவுத்த கோயிலுக்கு கூடுதல் நிலமா? தமிழர்களின் பூர்விக நிலங்கள் கோரி வெடித்த போராட்டம்!

தமிழர்களின் பூர்விக வாழ்விடங்கள் பவுத்த மயமாக்கப்படுவதாக கூறி இலங்கையில் போராட்டம் வெடித்துள்ளது.

Prakash J

தமிழர்களின் பூர்விக வாழ்விடங்கள் பவுத்த மயமாக்கப்படுவதாக கூறி இலங்கையில் போராட்டம் வெடித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் வலிகாமம் பகுதியில் உள்ள சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பவுத்த ஆலயத்தை அகற்றுவதன் மூலம் தங்களுக்கு சொந்தமான நிலங்களை விடுவிக்க கூறி தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில் தமிழர் கட்சிகள், பொது நல அமைப்பினரும் பங்கேற்றனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் , இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். ’வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம்...’ ’எமது நிலம் எமக்கு வேண்டும்’ என்பது போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக்க காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

srilanka

இலங்கையில், தமிழா்கள் பெரும்பான்மையாக வாழும் மிகவும் பின்தங்கியுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளா்ச்சிக்கு வழிவகை செய்யப்படும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றப்படவில்லை.

இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் யாழ்ப்பானம் சென்ற அதிபா் அநுரகுமார திசாநாயக, ”ராணுவ வசமுள்ள இலங்கை தமிழா்களிடம் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில், கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிபா் அநுரகுமார திசாநாயக ஆளும் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தபிறகு, அங்கு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக

இலங்கையில் ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகள் இடையேயான போர், கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதற்கு முன்பும் இந்தப் பகுதியில் சுமாா் 3,500 ஏக்கா் தனியாா் நிலங்களை இலங்கை ராணுவத்தினா் கையகப்படுத்தினா். இந்த நிலங்களில் சில கடந்த 2015 முதல் திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. எனினும், பெரும்பாலான இடங்கள் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நினைவுகூரத்தக்கது.