ட்ரம்ப் - கிம் சந்திப்புக்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், வடகொரியாவின் மூத்த அதிகாரி கிம் யோங் சோல் அமெரிக்காவுக்குப் பயணம்.
ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் கிம் ஜாங் உன்-னை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இச்சந்திப்பு திட்டமிட்டபடி சிங்கப்பூரில் நடக்கும் என்றும் வடகொரியாவுக்கு சிறப்பானதாக அமையும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பு நடக்குமா என்ற சந்தேகம் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்க அறிவித்தது.
இதனைதொடர்ந்து வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு நெருக்கமான உயர் அதிகாரியான கிம் யோங் சோல், அமெரிக்காவுக்குச் செல்ல இருக்கிறார். பெய்ஜிங் வழியாக நாளை அவர் அமெரிக்கா சென்றடைவார் என வடகொரிய ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இரு நாட்டு அதிபர்கள் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அதை இறுதி செய்யும் வகையில் இந்தப் பயணம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த வாரம் அறிவித்தார். இதனால் வடகொரிய அதிபருடனான சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆயினும் சில நாள்களில் இரு தலைவர்களும் மனம்மாறி, பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டிருக்கின்றனர்.