ஜப்பானில் பிரதமர் சனாயே டகாய்ச்சி (Sanae Takaichi) தலைமையிலான அரசு, தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் நிலையில், அநாட்டின் சமீபத்திய ஏவுகணை சோதனை மற்றும் பாதுகாப்புக் கொள்கை மாற்றங்கள், வடகொரியாவின் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.
அந்தவகையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரியும், அந்நாட்டு ஆட்சியில் மிகுந்த செல்வாக்கு கொண்ட தலைவருமான கிம் யோ ஜோங் (Kim Yo Jong), ஜப்பானுக்கு நேரடியாக கடும் ராணுவ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த எச்சரிக்கைக்கு முதன்மை காரணமாக இருப்பது, ஜப்பான் சமீபத்தில் அமெரிக்கா தயாரித்த டோமஹாக் நீண்ட தூர குரூஸ் ஏவுகணையை (Tomahawk cruise missile) வெற்றிகரமாக சோதித்ததுதான். இந்த ஏவுகணை சுமார் 1,600 கிலோமீட்டருக்கும் அதிக தூரத்தில் உள்ள இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பாதுகாப்பு நோக்கத்திலேயே ராணுவத்தை வைத்திருந்த ஜப்பான், தற்போது தாக்குதல் திறனையும் வளர்த்துக் கொண்டு வருவது வடகொரியாவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய கிம் யோ ஜோங், ஜப்பான் தனது அமைதிக் கொள்கையை விட்டு விலகி, ஆபத்தான ராணுவ சக்தியாக மாறி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸுடன் இணைந்து ஜப்பான் நடத்தி வரும் கூட்டு ராணுவப் பயிற்சிகளும் பிராந்திய அமைதியை சீர்குலைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு, இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், வடகொரியா "புதிய ராணுவ விருப்பங்களை" பரிசீலிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்துள்ளார். அந்த புதிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அவர் விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், வடகொரியாவின் முந்தைய செயல்பாடுகளைப் பார்க்கும்போது, நீண்ட தூர ஏவுகணை சோதனைகள் அல்லது புதிய ஆயுத செயல்பாடுகள் நடைபெறலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும் ஏவுகணை தொழில்நுட்பத்தையும் மேம்படுத்தி வருகிறது. அதே நேரத்தில், வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் தனது பாதுகாப்புச் செலவுகளை அதிகரித்து, அமெரிக்காவுடன் ராணுவ ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், கிம் யோ ஜோங்கின் இந்தக் கடும் எச்சரிக்கை, கிழக்கு ஆசியாவில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.