உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 20 நாட்களுக்கு பின் வடகொரிய அதிபர் கிம் பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
குழந்தை முகம், வித்தியாசமான சிகை அலங்காரம், பருமனான உடல், மிடுக்கான ஆடை, அதிரடி முடிவுகள் என எல்லாவற்றில் இருந்தும் மாறுபட்டு இருப்பவர் வடகொரிய அதிபர் கிம். உலகின் பல நாடுகள் வில்லனாக பார்க்கும் இவரின் ஒவ்வொரு நகர்வுகளும் மிகப்பெரிய செய்தியாக பார்க்கப்படும். அப்படிப்பட்ட சர்வாதிகாரி 20 நாட்களாக வெளியுலகத்தின் கண்களில் படவில்லை. இதனால் யூகங்களில் அடிப்படையில் பல்வேறு செய்திகள் வெளியாகின.
வடகொரியாவின் தேச தந்தையும் கிம்மின் தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் விழா ஏப்ரல் 15 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதில் அதிபர் கிம் பங்கேற்கவில்லை. முக்கியமான நிகழ்வில் கிம் பங்கேற்காதது அவரது உடல்நலம் குறித்து சந்தேகத்தை கிளப்பியது. புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை காரணமாக இதய நோயினால் கிம் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு கடந்த 12-ம் தேதி இதய அறுவை சிகிச்சை நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
அறுவை சிகிச்சை பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அதனால் கிம் சொகுசு விடுதியில் தங்கி ஓய்வெடுப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கசிந்தன. அதற்கேற்றாற்போல் வடகொரிய அதிபரும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், அரசாங்க அறிக்கை வெளியிடுவது தொடர்பான எந்த வேலைகளிலும் ஈடுபடாமல் அமைதியாக இருந்தார். எனினும் அண்டை நாடான தென்கொரியா கிம் உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை அவர் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கிடையில் வடகொரியாவின் அடுத்த அதிபராக கிம் சகோதரி வருவார் என்றும், அதற்கான ஏற்பாடுகள் தயாராகிவருவதாகவும் ஊடகங்கள் தொடர்ந்து யூகங்களின் அடிப்படையில் செய்திகளை பரப்பிவந்தன.
இந்நிலையில் நேற்று கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தலைநகர் பியோங்யாங் நகரில் உள்ள சன்ச்சூன் என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உர தொழிற்சாலை திறப்பு விழாவில் கிம் ஜாங் உன், தனது சகோதரியுடன் கலந்து கொண்டுள்ளார். உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அந்த தொழிற்சாலை திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கிம் ஜாங் உன் தொழிற்சாலையை ரிப்பன் வெட்டி தொடங்கிவைக்கும் புகைப்படங்களையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 2014 ஆம் ஆண்டு கிம் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்தன. அப்போதும் அவர் வெளியுலக தொடர்பை துண்டித்திருந்தார். அதன்பின் 6 வாரங்களுக்கு பின் மக்கள் மத்தியில் திடீரென தோன்றிய கிம் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கடந்த 20 நாட்களாக கிம் எங்கே சென்றார், எங்கிருந்தார் என்பது குறித்த எந்த தகவல் வெளியிடப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கிம் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கலாம் என்றும் எபோலா வைரஸ் பரவலின்போதும் கிம் இதேபோன்று வெளியுலகத்திலிருந்து மாயமானார் என்றும் கூறப்படுகிறது.