Khamenei's ringed hand web
உலகம்

ஈரானில் காமேனியின் மோதிர கை.. நான்கே நாளில் எழுந்த பிரம்மாண்ட சிற்பம்!!

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கில், நான்கு நாளில் முடிக்கப்பட்ட மோதிரக் கை நினைவுச் சின்னம், போர்க்கால மன உறுதியை வெளிப்படுத்தும் அரசியல் – மதச் சின்னமாக நிற்கிறது

PT WEB

செய்தியாளர் - M. மீரா

2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலின் முதல் நாளிலேயே ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் போர் தீவிரமாக தொடர்ந்து நீடித்ததால் , காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

Ali Khamenei's funeral procession

இந்நிலையில், அயதுல்லா அலி காமேனியின் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4-ம் தேதி தொடங்கியிருக்கின்றன. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள 'கிராண்ட் மொசல்லா' (Grand Mosalla) வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்றுகண்ணீர், மந்திர முழக்கங்கள், கருப்பு நிற உடைகளில் கடலென திரண்டிருந்த மக்களுடன் காமேனியின் இறுதி ஊர்வலம் தொடங்கியுள்ளது.

இறுதிச்சடங்கு ஊர்வலம் புனித நகரமான கோம் (Qom) வழியாகச் சென்று, பின்னர் ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களுக்கு செல்லும் . இறுதியாக மஷ்ஹத் (Mashhad) நகரில் வியாழக்கிழமையன்று சடங்குகள் நிறைவடையும்; அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் (Ayatollah Ali Khamenei) அடையாளச் சின்னமான மோதிரம் அணிந்த, ஓங்கி உயர்த்தப்பட்ட பிரம்மாண்டமான கைச்சிற்பம், தெஹ்ரானில் உள்ள எங்கேலாப் (Enghelab) சதுக்கத்தில் மற்றும் ஆசாதி (Azadi) சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிற்பம் எழுந்து நிற்க வேண்டும் (We Must Rise) என்ற உறுதியான முழக்கத்தை அடையாளப்படுத்துகிறது.

இந்த பிரம்மாண்டமான நினைவுச்சின்னம் (Monument) ஒரு பெரிய உறுதியான முஷ்டி (clenched fist) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Khamenei's ring hand

காமேனி எப்போதும் தனது கையில் அணிந்திருந்த பெரிய, செதுக்கப்பட்ட அக்ரிக் (Aqeeq) ரத்தினக் கல் பதித்த மோதிரம் இந்த சிற்பத்தில் தத்ரூபமாக இடம் பெற்றுள்ளது. ஈரானின் நீண்டகால தலைவராக இருந்த அலி காமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் அஞ்சலி ஊர்வலங்களின் போது இந்த பிரம்மாண்ட சிற்பம் முக்கிய அடையாளமாக விளங்கியது.

மேலும் வெறும் நான்கு நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம், மன உறுதி மற்றும் தேசிய ஒற்றுமைக்கான செய்தியை வெளிப்படுத்துவதாக ஈரானிய மக்கள் கருதுகிறார்கள்.