இந்தியப் பிரதிநிதிகள் Pt web
உலகம்

அயதுல்லா காமேனியின் இறுதிச் சடங்கு.. பிரதமர் மோடிக்கு அழைப்பு.. ஈரான் சென்ற இந்தியப் பிரதிநிதிகள்!

அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க, இந்தியப் பிரதிநிதிகள் ஈரான் சென்றுள்ளனர்.

Premkumar S

மத்திய கிழக்கு நாடுகளின் அரசியலில் கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அசைக்க முடியாத சக்தியாக இருந்தவர் அயதுல்லா அலி காமேனி. 1989 முதல் 2026 வரை ஈரானின் ஒட்டுமொத்த அதிகாரமும் இவர் கையில் தான் இருந்தது. இந்தசூழலில் தான், கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இஸ்லாமிய சட்டங்களின்படி, இறந்தவர்களின் உடலை உயிரிழந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றபோதிலும், வளைகுடா போர் 100 நாட்களை கடந்தும் நீடித்து வந்த நிலையில், கமேனியின் இறுதிச் சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.

அயதுல்லா அலி காமேனி

இந்தச் சூழலில்தான், பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் மத்தியஸ்தம் காரணமாக கடந்த ஜூன் 17 அன்று, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து, 4 மாதங்களுக்கு பிறகு, அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு ஜூலை 4-ம் தேதி முதல் ஜூலை 9 தேதி வரை நடைபெறும் என ஈரான் தெரிவித்திருந்தது.

தொடர்ந்து, இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு ஈரான் அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இந்திய பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்தவகையில் தான், இந்தியா சார்பில், மத்திய இணை அமைச்சர் பவித்ரா மார்கெரிட்டா மற்றும் பிகார் ஆளுநர் சையத் அட்டா ஹஸ்லைன் ஆகியோர் ஈரான் சென்றிருக்கின்றனர். இதையடுத்து, அவர்கள் அயதுல்லா அலி காமேனியில் இறுதிச் சடங்கில் பங்கேற்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அயதுல்லா அலி காமேனி இறுதிச் சடங்கு

அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் ஈரான் டெஹ்ரானில் இன்று தொடங்கியிருக்கும் நிலையில், அவரின் உடலுக்கு ஏராளமான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தெஹ்ரான், கோம் மற்றும் மஷ்ஹத் ஆகிய நகரங்களில் இறுதி ஊர்வலம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, ஜூலை 9ம் தேதி மஷ்ஹத் நகரில் உள்ள இமாம் ரெசா அவர்களின் புனித ஆலயத்தில் காமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகளில், 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.