canada ndtv
உலகம்

கனடா | நகைச்சுவை நடிகரின் கஃபே.. துப்பாக்கியால் சுட்ட காலிஸ்தான் அமைப்பினர்!

கனடாவில் உள்ள நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் கஃபே திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அதன்மீது காலிஸ்தானிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

கனடாவின் மக்கள்தொகையில் இந்தியர்களும் அடக்கம். அதிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீக்கியர்கள் இருக்கின்றனர். இவர்களில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளும் அடங்குவர். இவர்கள், ’காலிஸ்தான்’ என்ற தனி நாடு கேட்டுப் போராடி வருகின்றனர். இதை இந்தியா கடுமையாக எதிர்த்து வருகிறது. மேலும், இவர்கள் பிரிவினைவாதிகள் என அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனால் கனடாவில் இவர்களுக்குக் குடியுரிமையும், சலுகைகளும் வழங்கப்படுவதால் பலரும் அங்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

canada

பல ஆண்டுகளாக, கனடாவில் செயல்படும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் குறித்து இந்தியா கவலைகளை எழுப்பி வருகிறது. மேலும் அச்சுறுத்தலைச் சமாளிக்க அந்த நாடு போதுமான அளவு உதவி செய்யவில்லை என்றும் புகார் அளித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில், இந்திய அதிகாரிகள் ஈடுபட்டதாக கூறியதைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்தது. தற்போது மார்க் கார்னி தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதிலிருந்து உறவு மேம்பட்டுள்ளது.

இந்த நிலையில், கனடாவில் உள்ள நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவின் கஃபே திறக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, அதன்மீது காலிஸ்தானிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் ’கப்ஸ் கஃபே’ என்று அழைக்கப்படும் உணவகத்தை, கனடாவில் உள்ள நகைச்சுவை நடிகர் கபில் சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து சேவையில் ஈடுபட்டார். இந்தச் சேவையில் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு (கனடா நேரப்படி) எடுக்கப்பட்ட ஒரு வீடியோவில், காரில் அமர்ந்திருக்கும் ஒருவர் அந்த உணவகத்தின் ஜன்னலில் குறைந்தது ஒன்பது முறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறார். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

canada

இந்தச் சம்பவத்திற்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்றுள்ளார். இவர், பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பான NIA-வின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராக உள்ளார். விஸ்வ இந்து பரிஷத் (VHP) தலைவர் விகாஸ் பிரபாகர் என்ற விகாஸ் பக்காவின் கொலைக்காக அவர் தேடப்படுகிறார். VHP தலைவர் ஏப்ரல் 2024ஆம் ஆண்டு பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள அவரது கடையில் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பாபர் கல்சா இன்டர்நேஷனலுடன் தொடர்புடையவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். நகைச்சுவை நடிகர் கபில் சர்மா முன்பு கூறிய கருத்து ஒன்றால், ஹர்ஜித் சிங் கோபமடைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.