உலகம்

அமெரிக்கா சென்றார் வடகொரிய பிரதிநிதி

webteam

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் வலதுகரமாக இருப்பவராக கருதப்படும் ஜெனரல் கிம் யோங் சோல், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்ப்யோவை நியூயார்க்கில் சந்தித்து பேசினார்.

சிங்கப்பூரில் வரும் ஜூன் 12 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். அப்போது வடகொரியாவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் இந்தச் சந்திப்பை இறுதி செய்வதற்காக வடகொரியாவின் முக்கிய அதிகாரியான ஜெனரல் கிம் யோங் சோல், நியூயார்க் வந்தடைந்தார். பின்னர் ஐ.நா. தலைமையகம் அருகே உள்ள ஒரு கட்டடத்தில் சந்தித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் வடகொரியாவின் முக்கிய பிரதிநிதி ஒருவர், அமெரிக்காவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும்.