ஹமாஸை அழிப்பதாகக் கூறி காஸா மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 67,0000-திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சூழலில் அமெரிக்காவில் வசித்த பாலஸ்தீன சிந்தனையாளர் எட்வர்ட் செய்த் இல்லாதது ஒரு தார்மீக வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது என்கிறார் காஸர்கோடில் உள்ள கேரள மத்திய பல்கலைக்கழகத்தின் ஆங்கில துணைப் பேராசிரியரும் Edward Said and the Question of Subjectivity என்ற நூலை எழுதியவருமான பிரசாத் பன்னியன். அது குறித்தான செய்தியை தற்போது பார்க்கலாம்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1,200 இஸ்ரேலியர்களைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலுக்கு எதிர்வினையாக கடந்த இரண்டு ஆண்டுகளில் காஸாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 67,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்துள்ளது. 22 ஆண்டுகளுக்கு முன் மறைந்த எட்வர்ட் செய்த் இப்போது இருந்திருந்தால், நிச்சயமாக ஹமாஸின் தாக்குதலைக் கண்டித்திருப்பார். ஆனால் ஹமாஸின் வன்முறைக்கு வித்திட்ட இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு வரலாற்றை மறைத்திருக்க மாட்டார் என்கிறார், எட்வர்ட் செய்த் குறித்த நூல் ஒன்றை எழுதியிருக்கும் பிரசாத் பன்னியன்.
முன்னணி ஆங்கில நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், பாதுகாப்பின் பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆதிக்கத்தையும் ஆக்கிரமிப்பையும் நியாயப்படுத்தும் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதை செய்த் அம்பலப்படுத்தியிருப்பார் என்கிறார் . இஸ்ரேல்-பாலஸ்தீன விவகாரம் மேற்காசிய நாடுகளின் பிராந்திய பிரச்னை அல்ல.. அது சர்வதேச சமூகத்தின் மனசாட்சியின் அளவுகோல் என்பதை நினைவுக்கு கொண்டுவந்திருப்பார் என்றும் கூறுகிறார். செய்தைப் பொறுத்தவரை, ஓர் அறிவுஜீவியின் கடமை என்பது அதிகாரத்திடம் துணிச்சலாக உண்மையைப் பேசுவதும், வசதியான சமரசங்களைத் தவிர்ப்பதும் ஆகும்.
ஜூர்கன் ஹேபர்மாஸ் போன்ற மேற்கத்திய அறிஞர்களின் தத்துவமல்லாத நடைமுறை சார்ந்த அணுகுமுறையையும், சார்த்தர் போன்றவர்கள் பாலஸ்தீனம் பற்றிய உரையாடலில் மௌனம் காத்ததையும் அவர் விமர்சித்தார். இஸ்ரேல்-பாலஸ்தீன இரு அரசுத் தீர்வை மாயை என்று நிராகரித்த செய்த், இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் பொதுவான ஒரே மதச்சார்பற்ற ஜனநாயக அரசை வலியுறுத்தினார். பாலஸ்தீனியர்களை ‘பாதிக்கப்பட்டவர்களால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று வர்ணித்தார்.
யூதர்களின் துன்ப வரலாற்றை அவர் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் அந்த நினைவுகள் வேறு ஒரு மக்களின் அழிவுக்கான நியாயமாகிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அநீதி இழைப்பவர்களுக்கும் எதிராக துணிச்சலுடன் உண்மைகளை பேசிய செய்த்-இன், சமநிலையும் சிந்தனைத் தெளிவும் ஒப்பற்ற மானுட நேயமும் இன்றைய உலகத்துக்குத் தேவைப்படுகிறது.