கென்யா சடலங்கள்
கென்யா சடலங்கள் file image
உலகம்

”உண்ணாவிரதம் இருந்தால் கடவுளைக் காணலாம்..”- கென்யாவில் மத போதகரின் பேச்சை நம்பி பறிபோன 73 உயிர்கள்!

Prakash J

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடலோர பகுதியான மாலின்டி நகரைச் சேர்ந்தவர் பால் மெகன்சி. கிறிஸ்தவ அமைப்பின் தலைவரான இவரது பண்ணையில் சிலர் உணவின்றி உடல் மெலிந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் உணவின்றி மெலிந்த நிலையில் இருந்த 15 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் 4 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து, “உணவு, தண்ணீர் இன்றி உண்ணாவிரதம் இருந்தால் கடவுளைக் காண முடியும் என பால் மெகன்சி அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். அதை நம்பிய மக்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தெரிய வருகிறது.

இது தொடர்பாக ரகசிய தகவல் கிடைக்கப் பெற்றதன் நிலையிலேயே அங்கு சென்று விசாரணை நடத்தினோம். அதில்தான் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துவிட்டனர். மீதமுள்ள 11 பேரில் 3 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

தவிர, அவருக்குச் சொந்தமான பண்ணையில் ஆய்வு செய்ததில் கடந்த 3 நாட்களில் மட்டும் 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 31 கல்லறைகள் ஆழமற்றதாக இருந்துள்ளன. இக்கல்லறைகளில்தான் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன.

இவை அனைத்துமே சமீபத்தில் புதைக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகள் இறந்துபோன வழக்கில் பால் மெகன்சி மீது குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில், சடலங்கள் தொடர்ந்து கைப்பற்றப்படும் வழக்கிலும் பால் மெகன்சி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிதுரே கிண்டிகி, "800 ஏக்கர் பரப்பளவில் உள்ள அக்காடு முழுவதும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. காட்டின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிரமாய்ச் சோதனை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தோண்டத் தோண்ட சடலங்கள் கிடைக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.