kali
kali pt desk
உலகம்

ஓவியத்தில் ’காளி’யை அவமதிப்பு செய்வதா? - இந்தியர்களின் கொந்தளிப்பும்.. மன்னிப்பு கேட்ட உக்ரைனும்!

Prakash J

இந்தியாவில் காளியும் ஒரு தெய்வமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறது. இந்த நிலையில், காளி தெய்வத்தைச் சித்தரித்து உக்ரைன் அரசு வெளியிட்டிருந்த புகைப்படங்கள் இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கண்டங்கள் எழுந்த நிலையில், அதற்கு உக்ரைன் அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.

நடந்தது என்ன? எதற்காக வெடித்தது சர்ச்சை?

உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், 'Work of art' என்ற தலைப்பிட்டு 2 புகைப்படங்களைப் பதிவிட்டது. அதில் ஒரு புகைப்படம், அணுகுண்டுத் தாக்குதல் நடைபெற்ற பகுதியில் இருந்து மேலே கிளம்பும் கரும்புகையைக் காட்டுவதாக அமைந்திருந்தது.

மற்றொன்று, அந்தப் படத்தின் பின்னணியிலேயே ஹாலிவுட் கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோபோல் காட்சியளிக்கும் படம் பதிவிடப்பட்டிருந்தது. இந்தப் படம்தான் தற்போது பிரச்னையை உருவாக்கி இருக்கிறது. ஆம், அந்த மர்லின் மன்றோ படத்தை உற்று நோக்கினால், இந்தியர்கள் வணங்கும் காளி தெய்வத்தைப்போல் தோற்றம் கொண்டதாக உள்ளது.

ukraine twitter photo

அதாவது, நாக்கை வெளியே நீட்டிய படியும், மண்டை ஓடுகளுடன் காட்சியளிக்கும் காளியைப்போல அந்தப் புகைப்படம் இருந்தது. இதையடுத்தே, அந்தப் புகைப்படத்துக்கு எதிராகக் கண்டனங்கள் குவியத் தொடங்கின. அந்தப் படத்துக்கு எதிர்ப்பு வலுக்கவே, உக்ரைன் பாதுகாப்புத் துறை உடனே அதை ட்விட்டர் பக்கத்திலிருந்து நீக்கியது. ஆனாலும், அந்தப் படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்த இந்தியர்கள், ’உக்ரைன் அரசு இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ எனப் பதிவிட்டு வைரலாக்கினர்.

குறிப்பாக, இந்த ட்வீட்டைப் பகிர்ந்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா, "சமீபத்தில் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டெல்லியில் இந்தியாவிடம் ஆதரவைக் கோரியிருந்தார். அதற்குப் பின்னால் உக்ரைன் அரசாங்கத்தின் உண்மையான முகம் ஒளிந்திருக்கிறது. இந்திய தெய்வம் மாகாளியின் கேலிச்சித்திரம் ஒரு பிரச்சார சுவரொட்டியில் உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள இந்துக்களின் உணர்வுகள் மீதான தாக்குதல்” எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவு உலகம் முழுவதும் வைரலான நிலையில், இந்தியர்கள் பலரும் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள செயலியின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஆகிய இருவரையும் இணைத்து உக்ரைன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து உக்ரைன் அரசு இந்த விஷயத்தில் இன்று (மே 2) மன்னிப்பு கேட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எமினி ட்சாப்பர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இந்திய கலாசாரத்தை உக்ரைன் அரசு மதிக்கிறது. இந்து தெய்வமான காளியை அவமரியாதை செய்ததற்காக, உக்ரைன் அரசு வருந்துகிறது. காளியின் அந்தப் படம் நீக்கப்பட்டுவிட்டது. இந்தியாவுடன் பரஸ்பர மரியாதை மற்றும் நட்பின் உணர்வில் ஒத்துழைப்பு அதிகரிக்க உக்ரைன் உறுதியாக இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் - ரஷ்யா - நேட்டோ பிரச்னை

நோட்டா நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர் ஓர் ஆண்டைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் நடுநிலை வகித்து வருவதுடன், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் எனக் குரல் கொடுத்து வருகின்றன.