ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எட்டு வயது சிறுவன் எழுதியுள்ள கடிதம் ஒன்றுக்கு ஜஸ்டின் பதிலளித்துள்ளார்.
டேவிட் கெல்லர்மேன் என்பவர் ஒரு கடிதத்தை கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்துள்ளார். டேவிட் ஒரு வழக்கறிஞர். மேலும் ஒரு விளையாட்டு வீரரும் கூட. இவர் தனது எட்டு வயது மகனிடம் யாருக்காவது ஒரு கடிதம் எழுது என்று கூறியுள்ளார். அதற்கு அவரது மகன் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை தேர்வு செய்துள்ளார். அந்தக் கடிதம் பிரதமரின் மனைவியின் நலனைக் குறித்து அக்கறைக் கொள்ளும்படி எழுதப்பட்டுள்ளது. சிறுவனின் கையெழுத்தில் எழுதப்பட்டுள்ள கடிதத்திற்குப் பிரதமர் ஜஸ்டின் அவரது ட்விட்டர் பக்கத்தில் மிகுந்த மரியாதையுடன் பதிலளித்துள்ளார்.
அந்தச் சிறுவன் தனது கடிதத்தில், “உங்களது மனைவி நலமாக இருப்பதாக நான் நம்புகிறேன். அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அது உங்களிடமும் வருவதை நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளான். மேலும், அந்தச் சிறுவனுக்குப் பிரதமரிடம் கேட்பதற்கு சில கேள்விகள் இருந்துள்ளன. அதனையும் அவர் தன் கடிதத்தில் விளக்கம் கேட்டு எழுதியுள்ளான்.
"கொரோனா வைரஸ் பற்றி நான் உங்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன். கனடாவில் உள்ள அனைத்து மக்களும் நோய்வாய்ப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளனவா? மேலும், வைரஸில் இருந்து விலகி இருப்பதை உறுதிப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்? தயவுசெய்து சிறந்தவற்றைச் செய்யுங்கள்”என்று எழுதியுள்ளான். அதனைத் தொடர்ந்து, “இது எனது தாத்தா, பாட்டி யாரிடமிருந்து கிடைப்பதை நான் விரும்பவில்லை. அனைத்துவகையான கடின உழைப்பிற்கும் நன்றி. தயவுசெய்து பதில் எழுதுங்கள்” என நீண்டு செல்கிறது அந்தக் கடிதம்.
இந்நிலையில், கொரோனா தொற்று கனடாவை அச்சுறுத்தி வரும் இந்தக் கடுமையான சூழலிலும் ட்ரூடோ தனது அன்றாட பணிகளுக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி சிறுவனின் தனிப்பட்ட கடிதத்திற்கு ட்வீட் மூலம் பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “உங்கள் கடிதத்திற்கு நன்றி மைக்கேல். சோஃபி நன்றாக இருக்கிறாள். நான் நன்றாக இருக்கிறேன். கொரோனா பரவலைக் குறைப்பதற்கும் மேலும் தாத்தா, பாட்டி மற்றும் அனைத்து கனட மக்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத்தாக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம் ”என்று அதில் கூறியுள்ளார்.
மேலும் அவர், “நாடு முழுவதும் பல மருத்துவ வல்லுநர்கள் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், இதற்கு உதவ அனைவரும் செய்யக்கூடிய விஷயங்கள் என்று சில உள்ளன. இதை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்: உங்கள் கைகளை அடிக்கடி கழுவுங்கள் மற்றும் உங்கள் முழங்கையில் வைத்து இருமல் செய்யுங்கள். கூட்டமாக வெளியே செல்வதற்குப் பதிலாக, உரியவர்களுக்கு தொலைப்பேசியில் பேசுங்கள்” என்று கூறியுள்ளார்.