ஜஸ்டின் ட்ரூடோ எக்ஸ் தளம்
உலகம்

"பதவியை ராஜினாமா செய்கிறேன்" - கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவே அறிவித்துள்ளார்.

Prakash J

கனடா நாட்டின் பிரதமராக இருப்பவர், ஜஸ்டின் ட்ரூடோ. அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்தது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. தவிர அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மூலமும் நெருக்கடிகை எதிர்கொண்டு வருகிறார். இதனால், உள்நாட்டு அரசியலில் அவருக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

justin trudeau

தவிர, ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சிகளும் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், அவர் தனது ராஜினாமாவை அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகின. ட்ரூடோ உடனடியாக பதவியிலிருந்து விலகுவாரா அல்லது புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமராகத் தொடர்வாரா என்பது பற்றித் தெரியில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

இதற்கிடையே, வரும் 8ஆம் தேதி லிபரல் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது. அதில் கட்சி தொடர்பான பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் எனத் தெரிகிறது. அந்தக் கூட்டத்தில், இடைக்கால பிரதமர் யார் என்பது பற்றியும் முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதன்பிறகே தனது ராஜினாமா குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோவே அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கட்சிக்குள் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன். கட்சி அதன் புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தபிறகு, அதன் பதவியிலிருந்தும், பிரதமர் பதவியிலிருந்தும் நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன். இதுகுறித்து நீண்டநேரம் குடும்பத்தினரிடம் ஆலோசனை நடத்தியபிறகே இந்த முடிவை எடுத்துள்ளேன். கனடாவை வழிநடத்த கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரான பியர் பொய்லிவ்ரே சரியான நபர் அல்ல” எனத் தெரிவித்த அவர்,

justin trudeau

நாடாளுமன்றத்தை மார்ச் 24ஆம் தேதி வரை ஒத்திவைக்குமாறு கவர்னர் ஜெனரலிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 9 வருட ஆட்சிக்குப் பிறகு பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிரான சில நடவடிக்கைகளில் ட்ரூடோ ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் இந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஜஸ்டின் அங்கம் வகிக்கும் லிபரல் கட்சி தோல்வியைத் தழுவும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொலியேவ்ரினுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது. கனடாவின் அடுத்த பிரதமராக பியர் பொலியேவ்ரை தேர்ந்தெடுக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஏனெனில் அவரது வலுவான கருத்துகளும், பொருளாதாரக் கொள்கைகளும் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளன. ஆகையால் இந்த அரசியல் மாற்றம், கனடாவின் எதிர்காலக் கொள்கைகளில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.