உலகம்

"ஜூலியன் அசாஞ்சே மெலிந்துவிட்டார்"- சிறையில் சந்தித்துவிட்டு வந்த மனைவி உருக்கம்!

sharpana

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே சிறையில் வேதனைப்படுவதாகவும் முன்பைவிட மெலிந்துவிட்டதாகவும் அவரது மனைவி ஸ்டெல்லா வேதனையுடன் தெரிவித்துள்ளர்.

விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், ஊழல்கள் என அடுத்தடுத்து தனது இணைய தளத்தில் ஆதாரங்களையும் கோப்புகளையும் வெளியிட்டு உலகையே அதிர வைத்தார். குறிப்பாக, அமெரிக்க ராணுவம் ஈராக் மீது நடத்திய தாக்குதல் வீடியோக்கள் உலகையே அதிர வைத்தது. இதனால், அமெரிக்கா அசாஞ்சே மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது.

ஆஸ்திரேலியா, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகள் அவருக்கு உதவாத நிலையில் ஈகுவடார் நாடு மட்டும் அடைக்கலம் கொடுத்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக அங்கு தஞ்சம் அடைந்தவருக்கு திடீரென ஆதரவை விலக்கிக்கொண்டது ஈகுவடார்.

இதனால், இங்கிலாந்து காவல்துறையினர் அசாஞ்சேவை கைது செய்து கடந்த ஆண்டு தெற்கு லண்டனிலுள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், சிறையிலுள்ள ஜூலியன் அசாஞ்சேவை அவரது மனைவி ஸ்டெல்லா இரு குழந்தைகளுடன் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். ’20 நிமிட சந்திப்பில், அவரை மாஸ்க் அணிந்தே பார்த்தோம். கொரோனா சூழலால் அவரால் குழந்தைகளை தொட்டு அணைக்க முடியவில்லை. தூரமாக நின்றுதான் பேசவேண்டியிருந்தது.அவரும் மாஸ்க் அணிந்துகொண்டார். முன்பு பார்த்ததைவிட மெலிந்துவிட்டார்” என்று உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.