உலகம்

நெதர்லாந்து காதலரை மணந்தார் ஜோகர் இளவரசி!

நெதர்லாந்து காதலரை மணந்தார் ஜோகர் இளவரசி!

webteam

மலேசியாவின் ஜோகர் இளவரசி அமினா, தான் காதலித்து வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்தார். ஜோகர் பாரு நகரில் நடந்த இந்த திருமணம் இஸ்லாமிய முறைப்படி ஆடம்பரமாக நடந்தது.

மலேசியாவின், ஜோகர் மாகாண மன்னராக இருப்பவர் சுல்தான் இப்ராஹீம். அவரது ஒரே மகள் துன்கு துன் அமினா (31). இவர், நெதர்லாந்தைச் சேர்ந்த டென்னிஸ் (28) என்பவரை மூன்று வருடமாகக் காதலித்து வந்தார். மலேசியாவில், கட்டுமான நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த டென்னிஸை, ஓட்டல் ஒன்றில் சந்தித்த போது இவர்களுக்கு காதல் மலர்ந்தது. அமினாவின் விருப்பப்படி கிறிஸ்தவரான டென்னிஸ் முஸ்லிமாக மதம் மாறி, முகமது அப்துல்லா ஆனார். இதையடுத்து இவர்கள் காதலுக்கு சுல்தான் சம்மதம் தெரிவித்தார். 

இவர்கள் திருமணம், மலேசியாவின் ஜோகர் பாருவில் நேற்று கோலாகலமாக நடந்தது. இங்குள்ள அரண்மனையில் ஆடம்பரமாக நடந்த திருமண நிகழ்ச்சியில் அமீனாவுக்கு, டென்னிஸ் மோதிரம் மாற்றினார். அரண்மனைக்குள் நடந்த நிகழ்ச்சியில் 1,200 பேர் பங்கேற்றனர். வெளியில் இருந்தபடி, ஆயிரக்கணக்கானோர், பிரமாண்ட திரைகளில், திருமணத்தைக் கண்டுகளித்தனர். இந்த திருமணத்துக்காக ஜோகர் பாரு முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.