நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதற்கிடையே, ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியாவும் ஏவுகணை மற்றும் அணு ஆயுத உதவியை வழங்கி வருகிறது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், ஆயிரம் நாட்களைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு மேலும் 500 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறது. இதில் ராணுவ டாங்கிகள், ஏவுகணைகள் உள்பட அதிநவீன ஆயுதங்களும் அடக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதன்மூலம் ரஷ்யாவுடனான போர் தொடங்கியது முதல் உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய ஆயுத உதவி $66.5 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிகளவு ஆயுதங்களை வழங்குவதில் அமெரிக்காவே முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சமீபத்திய தொகுப்பு பைடன் நிர்வாகத்தின்கீழ் செய்யப்பட்ட இறுதி ஒதுக்கீடுகளில் ஒன்றாக இருக்கிறது.
ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்க உள்ளார். இதையடுத்து தனது பதவிக்காலத்தில் உக்ரைனுக்கான உதவிகளை விரைவுபடுத்த ஜோ பைடன் முயன்று வருகிறார். அதன் காரணமாக, இத்தகைய பெரிய தொகையை உக்ரைனுக்கு விடுவிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அடுத்த அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்பதற்கு முன்னர், இத்தகைய தொகையை விடுவிக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருக்கிறது.