உக்ரைனை தாக்கினால், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளும் வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
உக்ரைன் நாட்டு எல்லையில் ஒன்றே முக்கால் லட்சம் வீரர்களைக் கொண்ட ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. உக்ரைனுக்குள் ஊடுருவ ரஷ்யப் படைகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இரு நாட்டு எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. இச்சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் காணொலி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனை தாக்கினால், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஐரோப்பிய கூட்டமைப்புடன் இணைந்து, உக்ரைனுக்கு தேவையான ராணுவ உதவிகளும் வழங்கப்படும் என்றார். சோவித் கூட்டமைப்பாக இருந்தபோது, அதனுடன் இருந்த உக்ரைன் 1991ஆம் ஆண்டு தனி நாடாக மாறியது. எனினும் உக்ரைனுடன் இருந்த கிரிமீயாவை ரஷ்யா 2014 ஆம் ஆண்டு கைப்பற்றியது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது.