உலகம்

"புடின் ஒரு சர்வாதிகாரி; அவரது செயலால் உலகிற்கே பாதிப்பு" - ஜோ பைடன் பேச்சு

கலிலுல்லா

ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான் பரப்பில் பறக்க அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தடை விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வருடாந்திர உரையை ஆற்றினார். அப்போது பேசிய பைடன், ரஷ்யாவின் போரை எதிர்கொள்ள மேற்குலக நாடுகள் தயாராக இருப்பதாக தெரிவித்தார். ரஷ்ய அதிபர் புடின் ஒரு சர்வாதிகாரி என சாடிய பைடன், போரை தவிர்ப்பதற்கான முயற்சிகளை அவர் மேற்கொள்ளவே இல்லை என்றும் விமர்சித்தார். ரஷ்யா தனது அண்டை நாட்டில் ஊடுருவியதன் மூலம் பிற நாடுகளும் பாதிக்கப்படுவதாக பைடன் கவலை தெரிவித்தார்.

எனினும் அமெரிக்க படைகள் உக்ரைனில் நடந்து வரும் போரில் பங்கேற்காது என்றும் பைடன் உறுதியளித்தார்.அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிப்பதாகவும் இதன் மூலம் அந்நாட்டுக்கு பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்றும் அதிபர் பைடன் தெரிவித்தார். ரஷ்ய பொருளாதாரம் மிகமோசமான சரிவை கண்டுள்ளதாகவும் இதற்கு புடின் ஒருவர் மட்டுமே காரணம் என்றும் பைடன் விமர்சித்தார். அமெரிக்க அதிபராக பைடன் பதவியேற்ற பின் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் முதல்முறையாக உரையாற்றியது குறிப்பிடத்தக்கது