உலகம்

பைடன் மகன் குறித்த தகவல்கள் இருந்தால் வெளியிடுங்கள் - புடினுக்கு டிரம்ப் வேண்டுகோள்

ஜா. ஜாக்சன் சிங்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறித்து ஏதேனும் ரகசிய தகவல்கள் இருந்தால் அதனை வெளியிடுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் பைடன் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் போதே, தன்னை எதிர்த்து நின்ற ஜோ பைடன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் சுமத்தினார். குறிப்பாக, அவரது மகன் ரஷ்யாவில் தொழில் ரீதியாக பல முறைகேடுகளை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, ரஷ்ய உளவாளிகள் சிலரை தொடர்பு கொண்டு பைடன் குடும்பத்தினர் முறைகேடுகளில் ஈடுபட்டதாக தகவல் பரப்புமாறு டிரம்புக்கு நெருக்கமானவர்கள் கேட்டுக் கொண்டதாகவும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால், டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் ஏதும் இல்லாததால் அவரது பேச்சு தேர்தல் களத்தில் எடுபடவில்லை. முடிவில், தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்றாா்.

இருந்தபோதிலும், ஜோ பைடன் மீது அவ்வப்போது பல்வேறு முறைகேடு குற்றச்சாட்டுகளை டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். தற்போது உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில், ரஷ்ய அதிபர் விளாமிடிர் புடினுக்கு ஜோ பைடன் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார். அதே சமயத்தில், டிரம்போ, புடினை பாராட்டியும், பைடனை இகழ்ந்தும் பேசி வருகிறார். இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு டிரம்ப் நேற்று பேட்டியளித்திருந்தார். அதில் அவர், "ரஷ்ய அதிபர் புடினுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். ஜோ பைடனின் மகன் ஹன்ட்டர் பைடன் தொடர்பான ஏதேனும் ரகசிய தகவல் இருந்தால், அதனை நீங்கள் வெளியிடுங்கள். நான் கூறுவது புடினுக்கு புரியும் என நம்புகிறேன். அவர் கட்டாயம் அந்த தகவல்களை வெளியிடுவார். நாமும் உண்மையை தெரிந்து கொள்வோம்" எனக் கூறியுள்ளார்.