அமெரிக்க சுதந்திர தினக் கொண்டாட்டம் கண்கவர் வாணவேடிக்கைகளுடன் நடைபெற்றது.
அமெரிக்காவின் 245ஆவது சுதந்திர தினத்தை வான வேடிக்கைகளுடன் மக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். அமெரிக்காவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு சுதந்திர தினத்தை, வழக்கம் போல் வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்ந்தனர். தலைநகர் வாஷிங்டனில் அதிபரின் வெள்ளை மாளிகை அருகே நடைபெற்ற வான வேடிக்கையை, அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்து ரசித்தனர். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பெற்ற பின் நடைபெறும் முதல் கொண்டாட்ட நிகழ்வு இதுவாகும்.
நியூயார்க் நகரிலும், வான வேடிக்கைகளுடன் உற்சாகமாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. 16 மாதங்களுக்குப் பின், கொரோனாவில் இருந்து நாடு மீண்டதை இச்சுதந்திர தினத்தில் அனைத்து அமெரிக்கர்களும் கொண்டாட வேண்டும் என அதிபர் ஜோ பைடன் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவிற்குப் பின் அமெரிக்க மக்கள் மீண்டும் ஒன்றிணைந்து வருவதாகவும், ஆனால் கொரோனா தாக்கம் இன்னும் குறையவில்லை எனவும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.