உலகம்

நீரவ் மோடிக்கு சொந்தமான ரூ. 1350 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் - அமலாக்கத்துறை

webteam

நீரவ் மோடி மற்றும் மெஹுல் சொக்சிக்கு சொந்தமான சுமார் 2300கிலோ நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹாங்காங்கில் இருந்து மீட்டுள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 23 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெஹுல் சொக்சியும் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

அவர்களைக் கைது செய்து இந்தியா கொண்டு வர முயற்சிகள் தொடர்ந்து வரும் நிலையில் அவரது சொத்துகளை முடக்கிக் கைப்பற்றும் முயற்சியிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது. நீரவ் மோடியின் இடங்கள், சொகுசு கார்கள், விலை உயர்ந்த பொருட்கள் எனப் பலவற்றை அமலாக்கத்துறை ஏற்கெனவே கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் நீரவ் மோடி மற்றும் மெஹுல் சொக்சிக்கு சொந்தமான சுமார் 2300கிலோ தங்கள் மற்றும் வைர நகைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹாங்காங்கில் இருந்து மீட்டுள்ளனர். சுமார் 1350 கோடி மதிப்புள்ள நகைகளை அமலாக்கத்துறையினர் மீட்டு இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2018ம் ஆண்டே இந்த நகைகளை ஹாங்காங்கில் இருந்து துபாய்க்கு மாற்ற நீரவ் மோடி முயற்சி செய்ததாகவும், இது தொடர்பான தகவல் அப்போதே தங்களுக்குக் கிடைத்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. உன்னிப்பாக பின் தொடர்ந்த அமலாக்கத்துறை தற்போது 1350 கோடி மதிப்புள்ள நகைகளைக் கைப்பற்றியுள்ளனர்.