உலகம்

மணிக்கு 400 கிமீ வேகம்: வானில் சீறிப்பறந்த ஜெட் மனிதர்!

webteam

துபாயில் கடல் மட்டத்தில் இருந்து 1800 மீட்டர் உயரத்திற்கு பறந்து பிரான்ஸை சேர்ந்த ஜெட் மனிதர் வின்ஸ் ரெஃப்பெட் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பிரான்ஸை சேர்ந்த வின்ஸ் ரெஃப்பெட் பறக்கும் எந்திரம் மூலம் விமானம்போல பறந்து சென்று அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். அண்மையில் சீனாவின் தியான்மென் மலைப் பகுதியில் விமானம்போல சீறிப் பறந்து சாகசத்தில் ஈடுபட்டார்.

அதைத்தொடர்ந்து தற்போது துபாயில் கடல் மட்டத்தில் இருந்து ஆயிரத்து 800 மீட்டர் உயரத்திற்கு ஜெட் எந்திரம் மூலம் அவர் பறந்தார். பார்ப்பதற்கு பறவைகளின் இறக்கைகள்போல இருக்கும் இந்த எந்திரத்தில் விமானத்தில் இருக்கும் நான்கு ஜெட் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு எட்டு விநாடிக்கும் நூறு மீட்டர் என்ற உயரத்தில் பறந்த வின்ஸ் ரெஃப்பெட் மூன்றே நிமிடத்தில் 1800 மீட்டர் உயரத்தை அடைந்தார்.

மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில் மின்னல்போல வின்ஸ் ரெஃப்பெட் பறந்ததை துபாய் வாழ் மக்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். பறக்கும் எந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், உயிர் பிழைப்பதற்காக அதில் பாராசூட்டையும் ரெஃப்பெட் பொருத்தியிருந்தார். இறுதியாக பாராசூட் மூலமாகவும் ரெஃப்பெட் தரையிறங்கி காண்பித்தார்.