அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஸோஸ் இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளார். விவாகரத்து ஆன நிலையில், ஜெஃப் பிஸோஸ் தனது மனைவி மெக்கன்ஸிக்கு ஏரளாமான சொத்துக்களை வழங்கியதால், அவரும் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
2019-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டைவிட 2.2 சதவிகிதம் உயர்ந்து 2.96 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது. அதில், அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிஸோஸ் சுமார் 7 லட்சத்து 98 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் இந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சுமார் 5 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாயுடன் வாரன் பஃபெட் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பிஸோஸின் மனைவி மெக்கன்சி, 2 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதன்முறையாக ஃபோர்ப்ஸ் பட்டியலில் 15-ஆவது இடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த முறை 15 இடங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு ஃபோர்ப்ஸ் பட்டியலில் 275-ஆவது இடத்தை பிடித்துள்ளார். ட்ரம்பின் சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.