இருபது செகண்ட் முன்பே ரயில் புறப்பட்டுச் சென்றதற்காக, ஜப்பான் ரயில்வே நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுள்ளது.
நேரம் தவறாமைக்கும் அமைதிக்கும் பெயர் பெற்றது ஜப்பான். அங்குள்ளவர்கள் சத்தமாகக் கூடப் பேசுவதில்லை. அதே போல நேரத்தையும் சரியாகப் பின்பற்றுவார்கள். இந்நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவை, வடக்கு பகுதியில் இருந்து இணைக்கிறது சுகுபா எக்ஸ்பிரஸ் ரயில். இந்த ரயில், மினாமி நாகரேயமா ஸ்டேஷனுக்கு சரியான நேரத்துக்கு வந்தது. அங்கிருந்து காலை 9:44: 40 மணிக்கு கிளம்புவது வழக்கம். ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை 9:44:20 மணிக்கே ரயில் கிளம்பிவிட்டது. அதாவது சரியாக கிளம்பும் நேரத்தை விட இருபது விநாடி முன்னதாகக் கிளம்பிவிட்டது.
இதையடுத்து மெட்ரோபாலிடன் இன்டர்சிட்டி ரயில்வே நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயணிகளுக்கு ஏற்பட்ட அசவுகரியத்துக்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறியுள்ளது. ரயிலை இயக்கியவர் சரியாக நேரத்தைக் கவனிக்காததால் இந்த தவறு ஏற்பட்டதாகவும் இதுகுறித்து பயணிகள் யாரும் புகார் அளிக்கவில்லை என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் ரயில்வே துறையை தனியார் நிறுவனங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.