உலகம்

உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்னதாக சென்றதால் சம்பளம் பிடிப்பு

உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்னதாக சென்றதால் சம்பளம் பிடிப்பு

rajakannan

ஜப்பானில் மதிய உணவு இடைவேளைக்கு 3 நிமிடங்கள் முன்னதாக சென்றதால் ஊழியரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய நகரமான கோபேயின், மேற்குப் பகுதியில் நீர்ப்பணித்துறையில் பணியாற்றும் அந்த 64 வயது ஊழியருக்கு அரை நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் 12 மணி முதல் 1 மணி வரை மதிய உணவுக்கான இடைவேளை விடப்படும். கடந்த ஏழு மாதங்களில் அந்த ஊழியர் 26 முறை, மதிய உணவு இடைவேளையான பிற்பகல் 12 மணிக்கு முன்னதாக இருக்கையை விட்டு சென்றுள்ளார். அதேபோல், சமீபத்தில் ஒருநாள் உணவு வாங்குவதற்காக வெளியே வந்துள்ளதை அவரது அதிகாரி ஒருவர் பார்த்துள்ளார். அப்போது தான் அந்த ஊழியர் 3 நிமிடங்கள் முன்பாக உணவு இடைவேளைக்கு சென்றுள்ளது தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்த ஊழியர் தாமதமாக வந்ததற்காக அரைநாள் சம்பளத்தை நிறுவனம் பிடித்தம் செய்துள்ளது. அதோடு நிறுத்தி இருந்தால், இந்த நிகழ்வு பெரிதாக ஆகியிருக்காது. ஆனால், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் 4 பேர் அந்நாட்டு ஊடகம் ஒன்றில் தோன்றி நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்தனர். ஊழியரின் ஒழுங்கற்ற நடவடிக்கைக்காக தலை குனிந்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகு இந்தச் சம்பவம் ஜப்பான் நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன சொல்கிறது ஜப்பான் நிகழ்வு

ஜப்பான் நாடு என்றாலே அங்குள்ள மனிதர்கள் சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள் என்று தாம் நாம் அறிந்து வைத்துள்ளோம். இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா ஹீரோஷிமா, நாகாசாகி ஆகிய இரண்டு நகரங்களில் குண்டு வீசி அழித்தது. அந்த அழிவில் இருந்து ஜப்பான் மீளாது என்று உலக நாடுகள் நினைத்தது. ஆனால், தன்னுடைய கடினமான உழைப்பால் எல்லாவற்றையும் கடந்து ஜப்பான் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக மாறியது. இப்படியான ஒரு முகம் தான் ஜப்பான் நாட்டிற்கு தற்போது உள்ளது. 

கோபேயில் நடந்த இந்தச் சம்பவம் நேரத்தை ஜப்பான் நாடு எப்படி பார்க்கிறது என்பதை காட்டுவதாக இருக்கிறது. சில நிமிடங்கள் ஊழியர் தாமதமாக வந்ததற்கு ஊடகங்களில் தோன்றி நிர்வாகம் மன்னிப்பு கேட்கிறது என்பதை நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பொது சேவை ஊழியர் சட்டவிதிகளை அந்த ஊழியர் மீறி விட்டார்கள் என்பதை அவ்வளவு பெரிய விஷயமாக நிறுவனம் பார்க்கிறது. ஊழியர்களின் ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியமானது என்று ஜப்பானில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். 

ஜப்பானின் மற்றொரு முகம் என்ன சொல்கிறது

ஊழியர் மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் ஒருவர், “வாழ்க்கை தற்போது மிகவும் கடினமானதாக மாறியுள்ளது. டீ குடிக்க, சிகரெட் பிடிக்க, சிறிது நேரம் பேச இடைவேளை என்பதே இல்லை” என்று கூறியுள்ளார். சம்பந்தப்பட்ட ஊழியர் கூறுகையில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறுகின்றார். 


 
இது ஒருபுறம் இருக்க ஜப்பான் நாட்டில் பணிச் சுமை காரணமாக பலர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஆண்டு தோறும் உயிரிழப்பதாக செய்திகள் கூறுகின்றன. 2015ம் ஆண்டு மத்சுரி தகஹஷி என்ற 24 வயது இளம் பெண் பணிச் சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். ஒரு மாதத்தில் மட்டும் 100 மணி நேரம் கூடுதலாக வேலை செய்ததாக அவர் கூறியிருந்தார். அவரது மரணம் வேலை செய்யும் இடங்களின் கலாச்சாரம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நிர்பந்தத்தை ஜப்பான் அரசுக்கு ஏற்படுத்தியது. அதன்பிறகு நடத்தப்பட்ட ஆய்வில் 5 ஊழியர்களில் ஒருவர் பணிச்சுமை காரணமாக உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.