JAPAN'S MARS MOON MISSION  REUTERS
உலகம்

விண்ணில் பாய்ந்த விண்கலம்.. ஜப்பானின் அடுத்த முயற்சி.. செவ்வாய் நிலவில் விஞ்ஞானிகள் தேடுவது என்ன?

ஜப்பானின் MMX விண்கலம் செவ்வாய் நிலவான ஃபோபோஸிலிருந்து மண் மாதிரிகளைச் சேகரித்து, அதன் தோற்றம் குறித்த மர்மத்தை ஆராய்கிறது.

PT WEB

செய்தியாளர் : வெற்றிச்செல்வி

பூமியின் நிலவை பல நாடுகளும் ஆராய்ச்சி செய்துவரும் வேளையில், செவ்வாய் கிரகத்தின் நிலவுகளை ஆராய புதிய விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி உலகின் முதல் பயணத்தை தொடங்கியுள்ளது ஜப்பான்.. இந்த முயற்சியின் பின்னணி என்ன? இதன் மூலம் விஞ்ஞானிகள் தேடும் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா ?

ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான JAXA MMX Martian Moons eXploration என்ற ஆளில்லா விண்கலத்தை H3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ராக்கெட்டிலிருந்து பிரிந்த விண்கலம் தற்போது செவ்வாய் கிரகத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறது. 2027 ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையத் திட்டமிடப்பட்டுள்ள இந்த விண்கலம், செவ்வாய் கிரகத்தின் நிலவில் இருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவரும் எனக் கூறப்படுகிறது.

Mars moon Phobos

செவ்வாய் கிரகத்துக்கு ஃபோபோஸ், டீமோஸ் என இரண்டு நிலவுகள் இருக்கின்றன. இதில் ஃபோபோஸ் நிலவிலிருந்து 10 கிராம் மாதிரிகளைச் சேகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக விண்கலத்தில் 13 அறிவியல் கருவிகள் இடம்பெற்றுள்ளன. இவை நிலவின் மேற்பரப்பு, கனிம அமைப்பு, ஈர்ப்பு விசை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உதவும். அதேநேரத்தில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இணைந்து உருவாக்கிய IDEFIX என்ற சிறிய ரோவரும் இந்தப் பயணத்தில் இடம்பெற்றுள்ளது. இது ஃபோபோஸின் மேற்பரப்பை நேரடியாக ஆய்வு செய்து, அங்குள்ள மண்ணின் தன்மை மற்றும் நில அமைப்பு குறித்த தகவல்களை வழங்க உதவும்.

இந்த ஆய்வுக்குப் பின்னால் விஞ்ஞானிகளின் நீண்ட கால கேள்விக்கு பதில் கிடைக்க வாய்ப்புள்ளது. செவ்வாய் கிரகத்தின் ஃபோபோஸ், டீமோஸ் ஆகிய நிலவுகள் எப்படி உருவாகின ? செவ்வாய் கிரகத்தின் மீது ஒரு பெரிய விண்பொருள் மோதியபோது சிதறிய பாறைகள் ஒன்றுசேர்ந்து இந்த நிலவுகள் உருவானதா? அல்லது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருந்த சிறுகோள்களைச் செவ்வாயின் ஈர்ப்பு விசை பிடித்துக்கொண்டதா? என்பதுதான் அந்த கேள்வி.

MMX

இதற்கான பதிலைத் தேடுவதில்தான் ஃபோபோஸின் மண் மாதிரிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பூமிக்குக் கொண்டுவரப்படும் மாதிரிகளின் கனிம மற்றும் வேதியியல் அமைப்புகளை ஆய்வு செய்வதன் மூலம்,இதற்கான பதிலை விஞ்ஞானிகள் ஆராய முடியும். இதனால், அந்த நிலவுகளின் தோற்றம் மட்டுமல்லாமல், செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால வரலாற்றைப் பற்றியும் கூடுதல் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதுபோன்ற மாதிரிகளை விண்வெளியிலிருந்து பூமிக்குக் கொண்டுவருவது ஜப்பானுக்குப் புதிதல்ல. ஏற்கனவே ஹயபுசா திட்டங்கள் மூலம் சிறுகோள்களிலிருந்து மாதிரிகளைச் சேகரித்திருக்கிறது. அமெரிக்காவும் பென்னு சிறுகோளிலிருந்து மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவந்துள்ளது. ஆனால், செவ்வாய் கிரகத்தின் நிலவிலிருந்து மாதிரிகளைச் சேகரித்துப் பூமிக்குக் கொண்டுவரும் முதல் முயற்சியை ஜப்பான் செய்துள்ளது.

IDEFIX ROVER

இந்த திட்டத்தின்படி, MMX விண்கலம் 2030ல் செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியை நோக்கித் திரும்பி, 2031ல் மாதிரிகள் கொண்ட கேப்சூலை பூமிக்குக் கொண்டுவரும். இந்தக் கேப்சூல் ஆஸ்திரேலியாவில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

10 கிராம் மண் மாதிரிகள், செவ்வாயின் நிலவுகள் எப்படி உருவாகின என்ற முக்கியமான கேள்விக்கு விடை அளிப்பதோடு, செவ்வாய் கிரகத்தின் ஆரம்பகால வரலாற்றைப் புரிந்துகொள்ளவும் உதவலாம்.

ஜப்பானின் இந்த ஐந்தாண்டு விண்வெளிப் பயணம் உலகம் முழுவதும் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.