50 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், கடந்த மார்ச் 28ஆம் தேதி நண்பகல் 12.50 மணியளவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தரையில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.7 மற்றும் 6.4 ஆக பதிவாகின. இந்த நிலநடுக்கத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் பல அடுக்குமாடிக் கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல் சரிந்து விழுந்தன. மேலும், மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 2000 பேர் பலியாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்டுள்ள ஒரு மெகா நிலநடுக்கம் ஏற்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் 1.81 டிரில்லியன் டாலர்களை இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் யாரும் எதிர்பார்த்திடாத பேரழிவுகளைத் தரும், சுனாமிகளைத் தூண்டக்கூடும் என்றும் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழும் என்றும் ஜப்பான் நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. அத்துடன் இந்தப் பேரழிவால் சுமார் 3 லட்சம் மக்கள் பலியாகவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதியாக 270.3 டிரில்லியன் யென் அல்லது எதிர்பார்க்கப்படும் பொருளாதார சேதம், முந்தைய மதிப்பீடான 214.2 டிரில்லியன் யென்களைவிட அதிகரித்துள்ளது.
உலகின் மிக அதிக நிலநடுக்க பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும். இந்த நிலையில், இங்கு, 8 முதல் 9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கான 80% வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.