ஜப்பானில் தந்தைவழி ஆண்கள் மட்டுமே பேரரசராக முடியும் என்ற சட்டத் திருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இதன்மூலம், இளவரசி ஐக்கோவுக்கு பேரரசியாகும் தகுதி மறுக்கப்பட்டு, தற்போதைய பேரரசரின் 19 வயது மருமகன் ஹிசாஹிட்டோ அடுத்த வாரிசாக ஆக உள்ளார்.
ஜப்பானில், பேரரசர் பதவிக்கு தந்தை வழி ஆண்கள் மட்டுமே வர முடியும் என்ற பாரம்பரிய விதி உள்ளது. இந்த நிலையில், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் ஒரே மகளான 24 வயது இளவரசி ஐகோ ஜப்பானிய மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றவர். ஜப்பானில் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கருத்துக் கணிப்பில், சுமார் 83% மக்கள் பெண் ஒருவர் பேரரசியாக முடிசூடுவதை ஆதரிப்பதாகத் தெரிவித்தனர். இருப்பினும், பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் கன்சர்வேட்டிவ் அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாரம்பரியமான தந்தை வழி ஆண் வாரிசு முறையை மாற்றுவதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, தந்தைவழி ஆண்கள் மட்டுமே பேரரசராக முடியும் என்ற சட்டத் திருத்தத்தை அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம், தந்தை வழி ஆண்கள் மட்டுமே வர முடியும் என்ற பாரம்பரிய விதியை மீண்டும உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம், பெண்களுக்கோ அல்லது தாய்வழி வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கோ அரியணை ஏறும் வாய்ப்பை இச்சட்டத் திருத்தம் முழுமையாக மறுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 1947-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தச் சட்டத்தில் செய்யப்படும் முதல் முக்கிய திருத்தம் இதுவாகும். இதில் இரு முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
முதலாவதாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு (1947-இல்) அரச அந்தஸ்தை இழந்த 11 முன்னாள் கிளைக் குடும்பங்களைச் சேர்ந்த, தந்தை வழியில் அரச வம்சாவளியைக் கொண்ட 15 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்களை தற்போதைய அரச குடும்பம் தத்தெடுக்க இச்சட்டம் அனுமதிக்கிறது. தத்தெடுக்கப்படும் நபர்கள் நேரடியாகப் பேரரசராக முடியாது என்றாலும், அவர்களின் ஆண் வாரிசுகள் அரியணை ஏறத் தகுதி பெறுவர். இரண்டாவதாக, தற்போதைய சட்டப்படி, அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஒரு சாதாரணப் குடிமகனை திருமணம் செய்தால் தங்களது அரச அந்தஸ்தை இழந்துவிடுவார்கள். ஆனால் புதிய திருத்தத்தின்படி, அவர்கள் திருமணம் செய்துகொண்ட பிறகும் தங்கள் அரச அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இருப்பினும், அவர்களின் கணவர் அல்லது குழந்தைகளுக்கு அரச அந்தஸ்தோ, அரியணை ஏறும் உரிமையோ கிடைக்காது. ஏற்கெனவே, ஜப்பானிய அரச குடும்பம் மிக வேகமாகச் சுருங்கி வருகிறது. தற்போது இக்குடும்பத்தில் மொத்தம் 16 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதில் தற்போதைய பேரரசர் நருஹிட்டோவிற்குப் பிறகு அரியணை ஏறுவதற்குப் தகுதியுடைய வாரிசுகள் மிகக் குறைவாகவே உள்ளனர். அதிலும், பேரரசரின் சித்தப்பாவான இளவரசர் ஹிசாஹிட்டோவிற்கு ஆண் வாரிசு பிறக்கவில்லை எனில், தற்போதைய சட்டப்படி வாரிசுரிமை முடிவுக்கு வந்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாகவே, முன்னாள் கிளைக் குடும்பங்களில் இருந்து ஆண்களைத் தத்தெடுக்கும் புதிய வழிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும், இந்த ஆண் வாரிசு முறை குறித்து கடும் விமர்சனம் எழுந்துள்ளது. தவிர, ஜப்பானிய அரச குடும்பத்தை மேலும் இது நலிவடையச் செய்யலாம் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.