வெளி நாடுகளிலிருந்து ஜப்பான் வருபவர்கள் இரு வார தனிமைப்படுத்தலை மிறீனால் அவர்களது பெயர்களை பொதுவெளியில் அறிவிக்கும் நடைமுறை அமலாகியுள்ளது.
ஜப்பானில் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசு தவித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலவரப்படி ஜப்பானில் 8,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது இரு மடங்கு அதிகமாகும்.
இதற்கிடையில் வெளி நாடுகளிலிருந்து ஜப்பான் திரும்பும் பயணிகள் கட்டயமாக இரு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருக்கிறது. மேலும் அவர்கள் தங்களது மொபைலில் லொகேஷன் டிராக்கிங் செயலியை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மீறி பலர் பொது இடங்களில் சுற்றித்திரிவதாக தொடர்ச்சியான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, ஜப்பான் அரசு ஒரு புதிய உத்தியை கையிலெடுத்துள்ளது.
அதன்படி, வெளி நாடுகளிலிருந்து ஜப்பான் வருபவர்கள் இரு வார சுய தனிமைப்படுத்தலை மிறீனால் அவர்களது பெயர்களை பொதுவெளியில் அறிவிக்கும் நடைமுறை அமலாகியுள்ளது. இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து ஜப்பான் திரும்பிய 3 பேர், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இல்லாமல் விதிமீறலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து இந்த 3 பேரின் பெயர்களை சுகாதாரத்துறை அமைச்சகம் பொதுவெளியில் வெளியிட்டிருக்கிறது.