உலகம்

சூரியன் போல 10,000 கோடி விண்மீன்களுடைய இன்னொரு கேலக்ஸி... படம்பிடித்தது ஜேம்ஸ் வெப்!

webteam

மற்றுமொரு கேலக்ஸியின் (உடுதிறள்) படத்தை ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் படமெடுத்துள்ளது. பூமியிலிருந்து 22 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள NGC 7469 எனும் கேலக்ஸியை குவியப்படுத்தி எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நூற்றுக்கணக்கான விண்மீன்களும்  கேலக்ஸிக்களும் வெளிப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் கடந்த வருடம் டிசம்பர் மாதம் விண்ணில் அனுப்பப்பட்ட நிலையில் ஜூலை 12ஆம் தேதி முதல் அகச்சிவப்பு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. பேரண்டத்தின் வெவ்வேறு வகையான விண்மீன் கூட்டங்கள், தூசு மண்டலங்கள், கோள்கள் போன்றவற்றின் பல புகைப்படங்களை கடந்த ஆறு மாதமாக வெளியிட்டு அறிவியல் உலகை ஆச்சரியத்தை ஆழ்த்தி வருகிறது.  இந்நிலையில் நேற்று NGC 7469 என்கிற  கேலக்ஸியை (உடுதிறள்) ஜேம்ஸ் வெப் எடுத்த புகைபடத்தை நாசா வெளியிட்டுள்ளது. பூமியிலிருந்து 22 கோடி ஒளி ஆண்டு தொலைவு உள்ள இந்த கேலக்ஸியின் விட்டம் மட்டும் 90,000 ஒளி ஆண்டுகள். சூரியனில் கிளம்பும் ஒளி, சூரிய கிரகத்தின் கடைசியாக இருக்கும்.

ஒளியானது பூமியிலிருந்து சூரியனை கடக்க ஒரு வருடம் பயணிக்கும் தொலைவை தான் ஒரு ஒளியாண்டு என்கிறோம். அப்படியானால் பூமியிலிருந்து 22 கோடி ஒளியாண்டுகள் தொலைவு என்றால் எவ்வளவு தூரம் என பார்த்துக் கொள்ளுங்கள்! புளூட்டோ கிரகத்தை சென்றடைய ஐந்தரை மணி நேரம் ஆகும். 1784ம் ஆண்டு அதாவது 250 வருடங்களுக்கு முன்பே NGC 7469 கேலக்ஸி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக வெவ்வேறு வகைகளில் இந்த கேலக்ஸியின் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பிற்கு முந்தைய சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பாக கருதப்படும் ஹப்பிள் டெலஸ்கோப் இந்த கேலக்ஸியை ஏற்கனவே படம் எடுத்தாலும் ஜேம்ஸ் வெப் எடுத்த இந்த புகைப்படத்தில் கேலக்ஸியின் நட்சத்திர உருவாக்கம் மற்றும் அணுக்கரு பகுதி தெளிவாக வெளிப்பட்டுள்ளது.

இந்த கேலக்ஸியில் நமது சூரியன் போல பத்தாயிரம் கோடி விண்மீன்கள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த கேலக்ஸியின் அணுக்கரு பகுதியின் தனித்துவத்தையும் தூசு மற்றும் வாயுக்களால் ஏற்படும் நட்சத்திர உருவாக்கத்தை பற்றியும் ஜேம்ஸ் வெப் எடுத்த புகைப்படத்தில் தெளிவாக தெரிவதாக நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் கேலக்ஸிகளின் ஆரம்பகால உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

NGC 7469 கேலக்ஸின் இணை கேலக்ஸியான IC 5283 இந்த படத்தின் ஓரத்திலும், அதற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான கேலக்ஸிகள் வெளிப்பட்டுள்ளது. பூமி இருக்கும் சூரிய குடும்பம், பால் வழி அண்டம் எனும் கேலக்ஸியில் இருக்கும் நிலையில் அதில் உள்ள பத்தாயிரம் கோடி சூரியன்களில் ஒரு சூரியன் தான் நமது சூரியன். இந்நிலையில் 22 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள NGC 7469 வெறும் கேலக்ஸியின் அகச்சிவப்பு புகைப்படமானது மேலும் கேலக்ஸி உருவாக்கம் மற்றும் அண்ட விவரிப்பு பற்றி ஆராய்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்படுகிறது.

- பால வெற்றிவேல் நவநீதகிருஷ்ணன்