உலகம்

கரும்பலகையாக மாறும் பொது சுவர்கள் மற்றும் தடுப்புத் தகரங்கள்... ஆசிரியரின் அர்ப்பணிப்பு.!

Sinekadhara

உலகமே ஊரடங்கால் முடங்கி இருந்த நேரத்தில் பள்ளிகள் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. சுமார் ஆறு, ஏழு மாதங்களுக்குப் பிறகு தற்போது பல்வேறு நாடுகளில் நோய்த்தொற்றின் தன்மைக்கு ஏற்றவாறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. என்னதான் ஊரடங்கு என்றாலும், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது நமது நாட்டில் இணைய வசதிகளும், ஆன்லைன் வகுப்புகளும் குழந்தைகளின் கல்விக்கு பெரும்துணையாக இருந்துவருகின்றன. ஆனால் பல ஆப்பிரிக்க நாடுகளின் நிலைமை இன்றும் கவலைக்கிடமாகவே இருக்கிறது.

இந்நிலையில் வெப்பம்மிகுந்த கரீபியன் நாடான ஜமைக்காவில் இன்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. போர்கள் மற்றும் வன்முறைகள் அதிகமுள்ள சமூகச் சேர்ந்த 39 வயது ஆசிரியையான தனேகா மிகோய், மாணவர்கள் வழிவிலகி போய்விடக்கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு வித்தியாசமான முறையில் பாடம் கற்பித்துவருகிறார்.

அவர் தனது நகரமான கிங்ஸ்டனில் உள்ள எதற்கும் பயன்படுத்தப்படாத பொது சுவர்கள் மற்றும் தடுப்புத் தகரங்களில் தனது கணவரின் உதவியுடன் கருப்பு பெயிண்ட் அடித்து அவற்றை கரும்பலகைகளாக மாற்றியுள்ளார். இந்த கரும்பலகைகளில் தினமும் ஆரம்பப் பள்ளிப் பாடங்களை இவர் எழுதிவிடுகிறார். இதனால் வழிகளில் செல்லும் பெற்றோர்களும், மாணவர்களும் பாடங்களை குறிப்பெடுத்துக்கொள்கிறார்கள்.

பாடங்களை  எழுதும்போது சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் உறுதிசெய்துகொள்கிறார்கள்.  மிகாயின் வீட்டைக் கடக்கும்போது மாணவர்கள் வீட்டுப்பாடங்களை பெற்றுக்கொள்ளலாம், சந்தேகங்களை கேட்டுக்கொள்ளலாம்.

முதலில் தனது கணவரை 9 கரும்பலகைகளை உருவாக்கச் செய்திருக்கிறார். அதில் பச்சை, நீலம் மற்றும் வெள்ளை சாக்பீஸால் பாடங்களை எழுதிவருகிறார். தற்போது இந்த கரும்பலகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தனது 23 வயது மகளுடன் சேர்ந்து இந்த பணியைச் செய்ய மற்ற ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார். இவர்கள் தற்போது 120 குழந்தைகளுக்கு பாடம் கற்பித்துவருகின்றனர். இந்த மாதத் தொடக்கத்தில் அங்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் வாழும் சமூகமான லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் பெரும்பாலனவர்களிடம் இணைய வசதியோ, மொபைல்போன் வசதியோ இல்லை.

மிகாய் இதுபற்றி ராய்ட்டர்ஸுக்குக் கூறுகையில், ‘’அவர்களை சந்திக்காவிட்டால், பாடம் கற்பிக்காவிட்டால், இந்த சமூகத்தில் ஒரு குடும்பம் கல்வியை இழந்துவிடும். எனவே அதற்கு நாம்தான் ஏதாவது செய்யவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்’’ என்று கூறியுள்ளார்.

ஒரு குழந்தையின் தாயார் நட்டாலி டர்னர், ‘’நாங்கள் வாழும் சமூகத்தில் வன்முறை அதிகம். அது குழந்தைகளை பாதிக்கும். அவர்கள் வந்து இந்த கரும்பலகைகளில் உள்ள பாடங்களைப் பார்க்கும்போது, அவர்களுக்கு தவறான விஷயங்களில் நாட்டம் இருக்காது’’ என்று மிகாயின் இந்த செயலைப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜமைக்காவின் யுனிசெஃப் தலைவர் ரெபேக்கா டோர்டெல்லோ, ‘’ஆசியர் பணி ஓர் அழைப்பு என்பதற்கு இவர் ஓர் முன்னுதாரணமாக திகழ்கிறார். இவர்களுக்கு முறையான கல்வியைக் கொண்டு சேர்க்க சிறப்பான வழியை அரசாங்கள் தேடிக்கொண்டிருக்கிறது. ஆனால் மிகாய் நடைமுறைக்கு சாத்தியமான வழியை கண்டறிந்திருக்கிறார்’’ எனக் கூறியுள்ளார்.