உலகம்

சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டார் மசூத் அசார் - ஐநா அறிவிப்பு

webteam

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அறிவித்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஜெய்ஷ்- இ- முகமது தீவிரவாத அமைப்புக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்தன. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க கோரி அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்‌ட நாடுகள் தீர்மானத்தை முன்மொழிந்தன.

அதன்பின் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மீண்டும் மறுப்பு தெரிவித்தது. இதனையடுத்து இந்தியா-சீனா இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின்னர் இந்த விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என சீனா வெளியுறவுத்துறை தெரிவித்தது.

இந்நிலையில் இன்று ‘ஐநா1267’ கமிட்டி கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில் மசூத் அசார் சர்வதேச பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுவரை சீனா விதித்து வந்த மறுப்பை நீக்கிக்கொண்டதால் மசூத் அசார் இப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து ஐநாவிற்கான இந்திய தூதர் சையத் அக்பரூதின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்காக உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தத் தடையின் மூலம் மசூத் அசார் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யமுடியாது. அத்துடன் அசாரின் சொத்துகள் முடக்கப்படும் மற்றும் அவர் ஆயுதங்களை பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் இந்தியாவின் முயற்சிக்கு  கிடைத்த பெரிய வெற்றியாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.