உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் முகம் தெரியாத நபர்களுடன் பழகி அவர்கள்மீது காதல் வயப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக வருகிறது. அப்படிச் சமூக வலைதளங்களில் கிடைக்கும் காதலுக்காக தங்களது இனம், மதம், மொழியைத் துறந்து நாடுவிட்டு நாடு செல்வோர் பற்றிய செய்திகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
இந்தக் காதலில் வெற்றிபெறுபவர்களும் உண்டு; அதேநேரத்தில் முறையான ஆவணங்கள் இன்றிச் சிக்கிக் கொள்வோரும் உண்டு. அந்த வகையில், காதலுக்காக அண்டை நாடான பாகிஸ்தானுக்குச் சென்ற இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பாதல் பாபு. இவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சனா ராணி என்ற பெண், முகநூல் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து அவரிடம் நட்பு கொண்டுள்ளார். இந்த நட்பினால் ஈர்க்கப்பட்ட பாதல் பாபு, அந்தப் பெண்ணை காதலிக்கத் தொடங்கி உள்ளார். பின்னர், நேரில் சந்தித்து பேசி திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காக, இந்திய எல்லையைக் கடந்து சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் செல்ல முடிவெடுத்த அவர், பணி நிமித்தமாக டெல்லி செல்ல இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆகஸ்ட் மாதம், ரக்ஷா பந்தனுக்குப் பிறகு கிராமத்தைவிட்டு வெளியேறிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு முன்பு, அவரது குடும்பத்தினருக்கு வாட்ஸ்அப்பில் பேசியுள்ளார். அப்போது, தாம் பாதுகாப்பாக இருப்பதாகவும், வேலை கிடைத்ததாகவும் உறுதியளித்துள்ளார். தன்னிடம் செல்போன் வாங்க காசு இல்லாததால் நண்பரின் போனைப் பயன்படுத்தியதாகவும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், அங்கிருந்து எப்படியோ பாகிஸ்தான் எல்லையைத் தாண்டியுள்ளார்.
பின்னர் அந்தப் பெண் தங்கியிருந்த கிராமத்திற்கும் சென்றுள்ளார். (லாகூரிலிருந்து 240 கி.மீ. தொலவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் மண்டி பஹவுதீன் மாவட்டத்தில் உள்ல மவுங் கிராம்) அங்கே அவர் சுற்றிக் கொண்டிருந்தபோது அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது காதல் கதையை எடுத்துக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாக பஞ்சாப் போலீஸ் அதிகாரி நசீர் ஷா, “பாபுவும் தானும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஃபேஸ்புக்கில் நண்பர்கள். அவரை திருமணம் செய்யும் எண்ணம் இல்லை” என சனா ராணி கூறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பாபு, ராணியைச் சந்தித்தாரா என்பது பற்றியும், குடும்ப அழுத்தத்தின் பேரில்தான் அவர் பாபுவை திருமணம் செய்துகொள்ள மறுத்தாரா என்பது பற்றியும் போலீசார் உறுதிப்படுத்தவில்லை.
இதனைத் தொடர்ந்து, பாபு மீது சட்டப்பூர்வ ஆவணங்கள் ஏதுமின்றி பயணம் செய்ததால் வெளியுறவுச் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் அடுத்த விசாரணை ஜனவரி 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து பாதல் பாபுவின் தந்தை, “எங்களால் நம்பவே முடியவில்லை. இந்த நிமிடம்வரை அவர் டெல்லியில் வேலை செய்கிறார் என்றே எங்களுக்குத் தெரியும். ஆனால் தற்போது பாகிஸ்தான் சிறையில் இருப்பதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். இது ஏதோ திரைப்படம் பார்த்ததுபோல் உள்ளது" எனக் கூறியுள்ளார்.
பாபுவின் தாயார், "அவன் சின்ன பையன். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற எதையும் செய்ததில்லை. எங்கள் மகனை நாங்கள் திரும்பப் பெற வேண்டும். அவரை எப்படி வீட்டிற்கு அழைத்துச் செல்வது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எங்களுக்கு உதவுமாறு நாங்கள் பிரதமரை வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாபுவை விடுவிப்பதற்காக பாகிஸ்தானுடன் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்துமாறு குடும்பத்தினர் தற்போது பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே அலிகார் காவல்துறை கண்காணிப்பாளர் (கிராமப்புறம்) அம்ரித் ஜெயின், பாபு குடும்பத்தினரிடமிருந்து ஒரு குறிப்பாணைப் பெற்றதாகவும், இந்த விவகாரத்தை வெளியுறவு அமைச்சகத்திடம் கொண்டுசெல்வதாகவும் உறுதிப்படுத்தியுள்ளார்.