Italy Protest Reuters
உலகம்

பற்றி எரியும் இத்தாலி! நாடாளுமன்றத்தை நோக்கி மக்கள் படையெடுப்பு.. திணறும் அரசு!

விலைவாசி உயர்வால் வெடித்த போராட்டங்கள்: 50 நகரங்களில் மக்கள் குரல்!

PT WEB

2026 இத்தாலிய அமைதியின்மையின் காரணமாக, விலைவாசி உயர்வு மற்றும் அரசின் செலவுத் திட்ட மாற்றங்கள் எதிர்ப்பு போராட்டங்களை தூண்டியுள்ளன. 50 நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களில் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினர் இணைந்துள்ளனர். ரோமில் நடந்த மோதல்களில் போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்களை பயன்படுத்தினர்.

செய்தியாளர் - M.மீரா

இத்தாலியில் அக்டோபர் 16, 2026 முதல் 2026 இத்தாலிய அமைதியின்மை (2026 Italian unrest) என்ற பெயரில் தொடர் போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்கள் வெடித்துள்ளன. 2026 அக்டோபர் 31 நிலவரப்படி, இந்தத் தீவிரப் போராட்டம் கடந்த 15 நாட்களாக இத்தாலியின் ரோம், மிலன், நேபிள்ஸ் மற்றும் துரின் உட்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்களில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இத்தாலியில் நடக்கும் தீவிரப் போராட்டங்களுக்கு கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அரசின் வரவுசெலவுத் திட்டமே முக்கிய காரணங்களாகும்.

italy protest

உணவு, மின்சாரம் மற்றும் வாடகை போன்ற அத்தியாவசிய வாழ்க்கைச் செலவுகள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் அரசாங்கம் கல்வி, பொது சுகாதாரம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதியைக் குறைத்து, அதற்குப் பதிலாக இராணுவத்திற்கும் பாதுகாப்புத் துறைக்கும் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது.

இதைக் கண்டித்து பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் வீதியில் இறங்கியுள்ளனர். இவர்களுடன் விவசாயிகள் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் மற்றும் வேலைநிறுத்தங்களில் இணைந்துள்ளனர்.

இதனால் தலைநகர் ரோம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பதற்றமான சூழல் நிலவியது. நாடு முழுவதும் சுமார் 50 நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

italy protest

தலைநகர் ரோமில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி முன்னேற முயன்றனர். அப்போது போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை உடைக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீசார் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களையும் கண்ணீர் புகைக் குண்டுகளையும் பயன்படுத்தினர். சில இடங்களில் போலீஸ் வாகனங்கள் தீக்கிரையானதாகவும் தகவல்கள் வெளியாகின.

மேலும், போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபடுவோருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 20 ஆயிரம் யூரோ வரை அபராதமும் விதிக்கும் புதிய நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருவது இத்தாலி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.