child
child freepik
உலகம்

”10 வினாடிக்குள் பாலியல் சீண்டல் செய்தால் குற்றம் ஆகாது” தீர்ப்புக்கு இத்தாலியில் கடும் எதிர்ப்பு!

Prakash J

இத்தாலி ரோம் நகரைச் சேர்ந்த 17 வயது நிரம்பிய பள்ளி மாணவி, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்றைய தினம் தன்னுடைய வகுப்பறைக்காக, மாடிப் படிக்கட்டில் ஏறிய அவரை, அப்பள்ளியின் காவலாளி பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவி, அதிர்ச்சியுடன் திரும்பியுள்ளார். அதற்கு காவலாளி, ‘விளையாட்டுக்காகத் தான் இப்படிச் செய்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த அந்த மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தார். அப்போதுகூட, ’மாணவியைத் தாம் சீண்டியது உண்மைதான்’ என காவலாளி ஒப்புக்கொண்டாலும் ’வேடிக்கைக்காகதான் அப்படிச் செய்தேன்’ என அலட்சியமாகவே பதிலளித்துள்ளார்.

இதனால் இவ்விவகாரம் நீதிமன்றம் சென்றது. மாணவியிடம் பாலியல்ரீதியாக அத்துமீறிய காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க வேண்டும் என இவ்வழக்கு விசாரணையின்போது மாணவி தரப்பு வழக்கறிஞர் ஆண்ட்ரியா பியூட்டோனி வாதிட்டார்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள், ”மாணவியை காவலாளி 10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல்ரீதியாக சீண்டி உள்ளார். ஆகவே, அதை ஒரு குற்றமாகக் கருத முடியாது" என தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த காவலாளியைச் சில தினங்களுக்கு முன் நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பளித்தது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இத்தாலி மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதுடன், மாணவிக்கு ஆதரவாக போராட்டத்திலும் குதிக்க வைத்துள்ளது.

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை விமர்சித்து #10seconds, #quickgrope உள்ளிட்ட ஹேஸ்டேக்குகளைப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதேநேரத்தில், இந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மாணவியின் வழக்கறிஞர் ஆண்ட்ரியா பியூட்டோனி தெரிவித்துள்ளார்.

Rape

தீர்ப்பு குறித்து மாணவி, “இந்த விஷயத்தில் பள்ளி நிர்வாகமும், நீதிமன்றமும் தமக்கு அநீதி இழைத்துள்ளன. இந்த வழக்கில் உரிய நீதி வழங்கப்படவில்லை. இதன் மூலம், நாட்டின் நீதி பரிபாலன முறையை நம்பியது தவறு என்பதை உணரத் தொடங்கி இருக்கிறேன். அதுமட்டுமின்றி, அந்த காவலாளி சத்தமின்றி என்னைப் பாலியல்ரீதியாக துன்புறுத்தியது வேடிக்கையான விஷயம் அல்ல” என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.