செய்தியாளர் - கார்த்திகேயன்
நேபாளம் நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோஷி ஆற்றில், ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரால், ரசுவா, ரசுவாகடி, திமுரே ஆகிய பகுதிகளும், திரிசூலி நதி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களும், கடுமையான பாதிப்புகளுக்கு ஆளானதேடு, 165 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமின்றி, நேபாளத்தை சேர்ந்த 127 பேரும், இந்தியாவை சேர்ந்த 178 பேரும், அமெரிக்காவை சேர்ந்த 65 பேரும் என, 33 நாடுகளை சேர்ந்த 644 பேர் மாயமாகியுள்ளனர்.
இவ்வாறு மாயமானவர்களை தேடுவதற்காக, அந்நாட்டு ராணுவத்தினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு பெரிய பேரிடர் ஏற்படுவதற்கு, 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தான் காரணம் என்று, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் முன்பு கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த மாபெரும் இயற்கை பேரிடர் ஏற்படுவதற்கு நிலநடுக்கம் காரணம் இல்லை என்றும், வேறொரு அதிர்ச்சி காரணம் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. அதாவது, ஹைதராபாத்தில் உள்ள இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்தின் பேரிடர் மேலாண்மை ஆதரவுக் குழு ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நேபாளத்தில் உள்ள மிகப்பெரிய பனிப்பாறையின் 3-ல் 2 பங்கு சரிந்து விழுந்ததே, விபத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. பேரழிவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட படங்களையும், பேரழிவிற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களையும் ஒப்பிட்டதில் பனிப்பாறை உடைந்த பகுதி துல்லியமாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இஸ்ரோவின் 'ரிசோர்சாட்-2ஏ', நாசாவின் 'லேண்ட்சாட்-9' மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகமையின் 'சென்டினல்-2' ஆகிய செயற்கைக்கோள்கள் எடுத்த படங்களை ஒப்பிட்டு இது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு ஆரம்பகட்ட பகுப்பாய்வு மட்டுமே. விரிவான மதிப்பீடு பின்னர் வெளியிடப்படும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.