Isaac Herzog, benjamin netanyahu x page
உலகம்

ஊழல் வழக்கு.. மன்னிப்பு கோரிய இஸ்ரேல் பிரதமர்.. அதிபரின் நடவடிக்கை என்ன?

ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அதிபரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என அதிபர் இல்லம் தெரிவித்துள்ளது.

Prakash J

ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்நாட்டு அதிபரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என அதிபர் இல்லம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. அவர்,

  • கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் நன்கொடையாளர்களிடமிருந்து மதிப்புமிக்க பரிசுகளைப் பெற்றதாகவும்,

  • ஒரு பெரிய தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு ஒழுங்குமுறை அல்லது அரசியல் நன்மைகளை வழங்க அவர் தனது பொது அலுவலகத்தைப் பயன்படுத்தியதாகவும்,

  • அவர் ஒரு முக்கிய ஊடக வெளியீட்டாளருடன் முன்னுரிமை செய்தி சேகரிப்பைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும்,

நெதன்யாகு மீது ஊழல், மோசடி, நம்பிக்கை மீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

2019 முதல் விசாரணை நடைபெற்று வந்தாலும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் உள்ளிட்ட மோதல்களின் தொடர்ச்சியால் இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. ஹமாஸ் போர் நிறுத்தத்திற்குப் பிறகு இவ்விசாரணை சூடுபிடித்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இஸ்ரேல் அதிபரிடம் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், நெதன்யாகுவே தனக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். அவருடைய கடிதத்திற்குப் பதிலளித்துள்ள அதிபர் மாளிகை, “இந்தக் கடிதம் அசாதாரணமானது மற்றும் மிக முக்கியமானது. இதுகுறித்த அனைத்து தகவல்கள் மற்றும் அனைவரின் கருத்துகளைப் பெற்றபின், அதிபர் இந்தக் கோரிக்கையைப் பரிசீலிப்பார்" எனத் தெரிவித்துள்ளது. ஹெர்சாக் மற்றும் நெதன்யாகு இடையே கடந்த காலங்களில் அரசியல் வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவர்களின் நல்லுறவு செயல்பாட்டுக்குரியதாகக் கருதப்படுகிறது.

ஐசக் ஹெர்சாக்

இதனால், நெதன்யாகுவிற்கு எதிராக அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. அதேநேரத்தில், நீதித்துறை செயல்முறைகள் முடிவடைவதற்கு முன்பு அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டால், அது ஆட்சிக்கு ஆபத்து அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். குற்றத்தை ஒப்புக்கொள்ளாமல், வருத்தத்தை வெளிப்படுத்தாமல், அரசியல் வாழ்க்கையிலிருந்து உடனடியாக விலகாமல் நெதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க முடியாது என அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும், இந்த விசாரணையை இடைநிறுத்துவது என்பது தானாகவே நடக்காது என்றும், அட்டர்னி ஜெனரலுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். ஆகையால், இந்த செயல்முறை இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் வரை நீட்டிக்கப்படலாம் என்கின்றனர், அவர்கள். இன்னொரு புறம், இஸ்ரேலிய அரசியலமைப்பு மற்றும் விதிகள் அதிபருக்கு மன்னிப்பு தொடர்பாக பரந்த அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்பு இந்த கட்டமைப்பு அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.