உலகின் சுற்றுலா நாடுகளில் ஒன்றாக மாலத்தீவும் விளங்குகிறது. இங்கு, ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வருகை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், மாலத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலத்தீவின் குடிவரவுச் சட்டத்தில் மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன்மூலம் இந்தத் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாலத்தீவு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’குடிவரவுச் சட்டத்தின் மூன்றாவது திருத்தத்திற்கு அதிபர் முகம்மது மூயிஸ் ஒப்புதலளித்துள்ளது. இந்தப் புதிய திருத்தச் சட்டத்தின் மூலம் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் நபர்கள் மாலத்தீவின் எல்லைக்குள் நுழைய முடியாது’ என அதில் கூறப்பட்டுள்ளது.
மாலத்தீவு அரசின் இந்த உத்தரவானது, காஸா மீதான இஸ்ரேலின் போரில் பாலஸ்தீனர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் பாலஸ்தீன மக்களின் உரிமைகள் முறையாக வழங்கப்பட்டு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தியும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாட்டு அரசுகளும் இஸ்ரேலிய நாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.