ஐ.நா., நெதன்யாகு எக்ஸ் தளம்
உலகம்

பாலஸ்தீன அகதிகள் மீட்புப் பணி.. ஐ.நாவுக்கான தடையை நீக்கிய இஸ்ரேல்!

பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Prakash J

இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், தற்போது நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வருகின்றன.

இந்த நிலையில், பாலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா மீட்புப் பணிகள் முகமை சட்டத்தை உடனடியாக அமல்படுத்த இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள பதிவில், ’இஸ்ரேல் அமைச்சரவையில் ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவை அமல்படுத்த எவ்வித தடையும் இல்லை’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகு

ஐநாவின் இந்த முகமை, கடந்த பல ஆண்டுகளாக பாலஸ்தீன அகதிகளுக்கு அதிலும் குறிப்பாக, இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலுள்ள மேற்கு கரை, காஸா உள்ளிட்ட பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி சேவையாற்றி வந்தது. இந்த நிலையில், இஸ்ரேல் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா மீட்புப் பணிகள் முகமை செயல்பட கடந்த ஆண்டு இஸ்ரேல் அரசு தடை விதித்தது. இதற்கு ஐநா எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறி வரும் நிலையில், இஸ்ரேல் அரசு இந்த தடையை நீக்கியுள்ளது.