உலகம்

மெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை

மெல்போர்னில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை

webteam

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் 21 வயதான இஸ்ரேல் மாணவி கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலைச் சேர்ந்த 21 வயது மாணவியான அயா மாசர்வே மெல்போர்னில் உள்ள 'தி லா ட்ரோப்' பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று தன் சகோதரியுடன் போனில் பேசிக்கொண்டு அயா வந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். புதிய குரல்களை போன் மூலம் கேட்ட அயாவின் சகோதரி ஏதோ விபரீதம் என்பதை அறிந்து போலீசாருக்கு தகவல்கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அயா படிக்கும் பல்கலைக்கழகத்தின் அருகில் அவரது உடலை மீட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய காவல்துறையினர், ''ஒரு இளம்பெண் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். கொலை நடந்த இடத்திலிருந்து 100 மீ தொலைவில் டி சர்ட்டும், ஒரு தொப்பியையும் கைப்பற்றி உள்ளோம். இந்தத் தடயங்கள் விசாரணைக்கு உதவும் என்று நம்புகிறோம். இந்தக் கொலை குறித்து அப்பகுதிவாசிகளின் உதவியை நாடியுள்ளோம். அவர்கள் கொடுக்கும் சிறிய துப்பும் பெரிய அளவில் உதவியாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளனர்.

மாணவியை கொலை செய்தவர்கள் யார், எந்தக் காரணத்திற்காக கொலை செய்யப்பட்டார் உள்ளிட்ட பல கேள்விகளை உள்ளடக்கி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். 

2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் மெல்போர்ன் 5ம் இடத்தை பிடித்தது. தனி நபர் பாதுகாப்பில் 9வது இடத்தை பிடித்தது. இந்நிலையில் இளம்பெண் ஒருவர் கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்ட சம்பவம் மெல்போர்ன் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.