ஹமாஸ், இஸ்ரேல் எக்ஸ் தளம்
உலகம்

பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்.. இஸ்ரேல் சொல்வது என்ன?

ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் தொடக்க வரைவை இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Prakash J

ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் தொடக்க வரைவை இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது 20 அம்ச அமைதித் திட்டத்தைப் பரிந்துரைத்தார். இப்பரிந்துரை, போர் நிறுத்தம், ஹமாஸிடம் பிடிப்பட்டிருக்கும் பிணைக்கைதிகளை விடுவித்தல், இஸ்ரேல் படிப்படியாக காஸாவிலிருந்து வெளியேறுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இந்தத் திட்டத்திற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் ஒப்புதல் அளித்த நிலையில், காஸாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸுக்கு பதிலளிக்க அவகாசம் அளிக்கப்பட்டது. அப்படி பதிலளிக்கவில்லை என்றால் முடிவு மிக மோசமானதாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஹமாஸுக்கு அரபு நாடுகள் வாயிலாகவும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

ஹமாஸ்

இதைத் தொடர்ந்து, ஹமாஸும் அதிபர் ட்ரம்பின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டது. பின்னர் இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டத்தின்போது இஸ்ரேலும், ஹமாஸும் கையெழுத்திட்டன. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதற்கட்டத்திற்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்தது. மேலும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இதையடுத்து, மக்கள் பலரும் மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பினரால் பிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் தொடக்க வரைவை இஸ்ரேல் அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது முழுமையான ஒப்பந்தமல்ல, பேச்சுவார்த்தைக்கான அடித்தள வரைவு மட்டுமே என பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகுவின் அலுவலகம் விளக்கியுள்ளது. ஒப்பந்தத்தின்கீழ், ஹமாஸ் 20 பணயக் கைதிகளையும் சிலரின் உடல்களையும் 72 மணிநேரத்தில் விடுவிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு பதிலாக, இஸ்ரேல் 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும், சில இடங்களில் ராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தவும் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக 24 மணிநேர போர் நிறுத்தமும் அமல்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகியவை மத்தியஸ்த நாடுகளாகச் செயல்பட்டு முக்கியப் பங்கு வகித்துவருகின்றன.

israel

கைதிகள் விடுவிப்பு மற்றும் காஸா பகுதியில் எதிர்கால நிர்வாகம் குறித்த சில முக்கிய அம்சங்கள் இன்னும் விவாத நிலையில் உள்ளன. இதனால், இறுதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகும் என்பது குறித்து சர்வதேச சமூகம் கவனமாக கண்காணித்து வருகிறது. மறுபுறம், ஹமாஸ் அமைப்பினர் ஒப்படைக்கும் பிணைக்கைதிகளுக்குப் பதிலாக, இஸ்ரேல் தான் விடுதலை செய்யவுள்ள 250 பாலஸ்தீனக் கைதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. காஸா அமைதி ஒப்பந்தத்தின் விளைவாக, ஹமாஸ், இஸ்ரேல் என இருதரப்பும் பரஸ்பரம் பிணைக்கைதிகளைப் பரிமாறிக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி ஹமாஸ் தன் வசம் எஞ்சியுள்ள இஸ்ரேல் கைதிகள் அனைவரையும் விடுவிக்க உள்ளது. அதற்கு ஈடாக, இஸ்ரேல் அரசால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 250 பாலஸ்தீனக் கைதிகளை விடுவிக்கஉள்ளது. ஆனால், ஹமாஸ் அமைப்பு விடுவிக்கக் கோரிய முக்கியமான தலைவர்கள் சிலரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.