அணு ஆயுத விவகாரம் தொடர்பாக இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இருப்பதால், அது ஈரானை முழுமையாகக் குறிவைத்துள்ளது. இதற்கிடையே, லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராகவும் தனது இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லாவின் முக்கியத் தளபதியைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF)படி, தளபதி முகமது காதர் அல்-ஹுசைனி, ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் ஒரு மூத்த நபராக இருந்தார் எனவும், அவர் இஸ்ரேலின் நஹாரியா மற்றும் ஹைஃபா உள்ளிட்ட நகரங்கள் மீது பல தாக்குதல்களை நடத்துவதில் முக்கிய பங்கு வகித்தார் எனவும், சமீபத்தில் ஹிஸ்புல்லாவின் பலவீனமான பீரங்கி பிரிவுகளை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார் எனவும் அது தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 18ஆம் தேதி இரவு நடைபெற்ற தாக்குதலின்போது இரண்டு ஹிஸ்புல்லா தளபதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரான முகமது அஹ்மத் க்ரைஸ், செபாவை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லாவின் டாங்க் எதிர்ப்பு ஏவுகணைப் பிரிவை வழிநடத்தினார். ஏப்ரல் 26 அன்று மவுண்ட் டோவ் மீதான தாக்குதலுக்கு அவர் நேரடியாகப் பொறுப்பேற்றார். மேலும் ஈரான் போருக்கு மத்தியில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக தாக்குதல்களை அதிகரிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. ”பயங்கரவாதம் இருந்தால், ஹிஸ்புல்லா இருக்காது” என எச்சரித்துள்ள இஸ்ரேல், ஈரான் விதைத்த இந்த கிளை அமைப்புகளைச் சமீபகாலமாக அது அழித்து வருவது குறிப்பிடத்தக்கது. உண்மையில், இஸ்ரேல் தன்னுடைய வடக்குப் பகுதிக்கு உடனடி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்க வேண்டிய அவசரத் தேவையை மேற்கோள் காட்டியே இத்தாக்குதலை நடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.