இஸ்ரேல் காசா போர், டொனால்ட் டிரம்ப் pt web
உலகம்

Trump-ன் காசா அமைதி திட்டம் நிராகரிப்பு.. இஸ்ரேல் பின்வாங்காது என நெதன்யாகு திட்டவட்டம்!

காசாவுக்கான ட்ரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் நிராகரித்துவிட்டது என்றும், ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களைக் கைவிடும் வரை அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்..

Rishan Vengai

காசா போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பலி, உலகம் அமைதி கோரும் நிலையில் ட்ரம்ப் 15 அம்ச அமைதித் திட்டம் முன்வைத்து ஹமாஸ், இஸ்ரேல் இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியார். ஆயுதம் கைவிடல், சர்வதேச பாதுகாப்புப் படை, புதிய பாலஸ்தீன நிர்வாகம், இஸ்ரேல் படை பின்வாங்கல் உள்ளிட்ட நிபந்தனைகள் கொண்ட திட்டத்தை ஹமாஸ் ஏற்றாலும், ஹமாஸ் முழு ஆயுதக் களைவு வரை படைகள் பின்வாங்காது என நெதன்யாகு திட்டவட்டமாக நிராகரித்தது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் காஸாவை, 2007 முதல் ஹமாஸ் அமைப்பினர் நிர்வகித்து வருகின்றனர். அதேநேரத்தில், காஸாவை ஆக்கிரமிக்கவும் இஸ்ரேல் ஆர்வம் காட்டி வருகிறது. ஆகையால், இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், கடந்த 2023ஆம் ஆண்டு ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக, காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளைத் தாண்டியும் நீடித்துவரும் இந்தப் போரில், அங்கு இதுவரை 73000-க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே காசா மக்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், அங்கு அமைதியை ஏற்படுத்தவும் உலக நாடுகள் அடுத்தடுத்து குரல் எழுப்பின.

தங்களது பகுதிகளுக்குத் திரும்பும் காசா மக்கள்

இந்தசூழலில் காசா விவகாரத்தில் கடந்த ஜூலை 30 அன்று 15 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை முன்மொழிந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹமாஸ் - இஸ்ரேல் ஆகிய இரண்டு தரப்பினருடமும் பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபட்டார். அந்த 15 அம்ச திட்டத்தின் படி, ஹமாஸ் தங்களுடைய ஆயுதங்களை படிப்படியாக கைவிட வேண்டும். பின்னர் ஒரு சர்வதேசப் பாதுகாப்புப் படையை காசாவில் நிலைநிறுத்துவது, புதிய பாலஸ்தீன நிர்வாக அமைப்பை அங்கே ஏற்படுத்துவது மற்றும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுத குழுக்கள் தங்களுடைய ஆயுதங்களை அந்த புதிய ஆளும் அமைப்பிடம் முழுமையாக ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.

அதேபோல இஸ்ரேல் தரப்பில் உடனடியாக படைகள் பின்வாங்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. இந்த முன்மொழிதலுக்கு ஹமாஸ் ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், இஸ்ரேலும் இதில் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் சமீபத்தில் ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

இஸ்ரேல் பின்வாங்காது என அறிவிப்பு..

இந்தசூழலில் தான் இஸ்ரேலின் படையை வெளியேற்றினால் தான் ஆயுதங்களை கைவிடுவோம் என்ற ஹமாஸின் நிபந்தனையை ஏற்க மறுத்திருக்கும் நெதன்யாகு, ட்ரம்பின் 15 அம்ச அமைதித் திட்டத்தை மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் பேசியிருக்கும் அவர், ‘ஹமாஸ் முழுமையாக ஆயுதங்களை கைவிடும்வரை இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் பின்வாங்காது. ஹமாஸ் ஆயுதங்களைக் களைய வேண்டும் என்று நாம் கூறியதில், ​​கனரக ஆயுதங்கள், இலகுரக ஆயுதங்கள் என அனைத்து ஆயுதங்களையும் குறிப்பிட்டோம். நாம் பேசுவது உண்மையான ஆயுதக் களைவு பற்றியே தவிர, கற்பனையான ஒன்றைப் பற்றி அல்ல. அதுவரை நமது படைகளுக்கும் குடிமக்களுக்கும் எதிரான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து நம்படை முறியடிக்கும்” என தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப், நெதன்யாகு

ஏற்கனவே ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் ட்ரம்ப்புக்கும், நெதன்யாகுக்கும் இடையே கருத்து மோதல் இருந்துவருவதாக சொல்லப்படும் நிலையில், காசா விவகாரத்திலும் ட்ரம்ப்பின் 15 அம்ச திட்டத்தை நெதன்யாகு நிராகரித்திருப்பது கவனம் பெற்றுள்ளது. இருப்பினும் காசா அமைதி திட்டத்தில் நெதன்யாகுக்கு ஆரம்பம்முதலே விரும்பம் இல்லையென்றாலும் உடனடியாக நிராகரிக்காமல், ட்ரம்ப்புக்கு ஏமாற்றம் அளிக்காதவகையில் ஒரு வராம் கழித்தே இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

காசா விவகாரத்தை பொறுத்தவரையில் வாஷிங்டனில் மாற்றுவழிகள் இருப்பதாக தெரிவித்திருக்கும் நெதன்யாகு, தொடர்ந்து அதுகுறித்து பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு ட்ரம்ப் தரப்பில் என்ன எதிர்வினை ஆற்றப்படும், மோதலில் என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.