இஸ்ரேலில் மிக நீண்ட நாள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்ற பெஞ்சமின் நெத்தன்யாஹூ, எதிர்க்கட்சிகள அனைத்தும் ஒன்றிணைந்து நிற்பதால் தனது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அங்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அவருக்கு ஆதரவளிக்க கூட்டணிக் கட்சிகள் முன்வராத நிலையில் தற்போது மோசடி வழக்கையும் சந்தித்து வரும் நெத்தன்யாஹூ காபந்து பிரதமராக உள்ளார்.
முக்கிய எதிர்க்கட்சிகளில் ஒன்றான செண்ட்ரிஸ்ட் கட்சியின் தலைவர் யார் லாபிட் அரசு அமைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நெத்தன்யாஹூவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்திருந்த வலதுசாரி தலைவர் நஃப்டெய்ல் பென்னட் யார் லாபிடுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அறிவித்தது நெத்தன்யாஹூவிற்கு பின்னடைவாக அமைந்தது.
நெத்தன்யாஹூவின் லிக்குட் கட்சியிலிருந்து பிரிந்த கிதியோன் சாரும் எதிர்க்கட்சிகளுடன் அரசு அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். புதிய அரசு அமைக்க யார் லாபிட்டிற்கு புதன்கிழமை வரை அவகாசம் உள்ளது. யார் லாபிட் மற்றும் நப்ஃடெய்ல் பென்னட் இடையே பிரதமர் பதவியை சுழற்சிமுறையில் வகிப்பது என்கிற ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
இதன் மூலம் 12 ஆண்டு காலம் பிரதமராக இருக்கும் நெத்தன்யாஹூவின் பதவிக்காலம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.