ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையேயான போரின் முதலாவது நாளிலேயே 35 ஆண்டு காலம் ஈரானை ஆட்சி செய்து வந்த உச்சத்தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார். உச்சத்தலைவரின் மரணத்திற்கு பலி வாங்கப்போவதாக கூறிய ஈரான் ராணுவம், நெதன்யாகுவை குறிவைத்துக் கொல்வோம் எனத் தெரிவித்தது. தொடர்ந்து, ஈரான் ஆதரவு சமூக ஊடகங்களில் இருந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் பரவியது. மேலும், மார்ச் 13 ஆம் தேதி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய ஈரான் தொடர்பான உரையில், அவரது கையில் 6 விரல் இருப்பது போன்ற தோற்றம் வெளியானது. இது ஏஐ-யால் உருவாக்கப்பட்ட வீடியோ போல் இருக்கிறது என கருத்துக்கள் வெளியான நிலையில், அவர் உயிருடன் இல்லை என்ற தகவல்கள் தீவிரமான பரவின.
இந்த சூழலில் தான், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஒரு சில தினங்களுக்கு முன் நெதன்யாகு தனது எக்ஸ் தளத்தில் ஒரு காணொளி ஒன்றை பகிர்ந்தார். அதில், தான் உயிருடன் தான் இருக்கிறேன். காபிக்காக இறந்துகொண்டிருக்கிறேன் எனவும் தனக்கு 5 விரல்கள் மட்டுமே இருக்கின்றன எனவும் நகைச்சுவையாக சுட்டிக்காட்டினார். ஆனால், இந்த வீடியோவிலும் அவர் பேசுவது இயல்பாக இல்லை. காபி கப்-இல் காபி குறையவில்லை போன்ற காரணங்களைச் சுட்டிக்காட்டி இதுவும் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்ட வீடியோ போல இருக்கிறது என சந்தேகங்கள் எழத் தொடங்கின.
இந்த சூழலில் தான், காபி ஷாப்பில் எடுக்கப்பட்ட வீடியோ, போலி என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று முன் தினம் ஒரு வீடியோவை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், ஜெருசேலம் நகர வீதியில் இருந்தபடி பொதுமக்களிடம் நெதன்யாகு உரையாடுவது பதிவாகியிருந்தது. மேலும், பொதுமக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆனால், அந்த வீடியோவும் போலியாக இருப்பதற்கு வாய்ப்பிருப்பதாக தகவல் பரவியது.
இந்நிலையில், நெதன்யாகு நேற்று மீண்டும் ஒரு வீடியோ நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி, நீங்கள் நலமாக இருக்கிறீர்களா என டிரம்ப் பார்த்து வரச் சொன்னார்” என கூறுகிறார். அதற்கு, நெதன்யாகு “ஆம் மைக். நான் உயிருடன் தான் இருக்கிறேன்” எனக் கூறுகிறார். தொடர்ந்து, நெதன்யாகுவின் கையில் 6 விரல் தோன்றுகிறது என்ற சமூக ஊடகங்களின் பதிவுகளை நகைச்சுவையாக கிண்டல் செய்திருக்கிறார். அதேசமயம், ஈரான் போரில், டொனால்ட் டிரம்பும், அமெரிக்கப் படைகளும் செய்து வரும் பணி வியக்கத்தக்கது எனக் கூறும் அவர், ஈரானுக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவுடன் தோளோடு தோள் நிற்பதில் இஸ்ரேல் பெருமிதம் கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.