இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும் இரண்டாம்கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படாததால், அங்கு தற்போது மீண்டும் போர் நடைபெற்று வருகிறது. இதில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காஸாவை முழுவதுமாகக் கைப்பற்றுவதற்கான புதிய திட்டத்திற்கு, இஸ்ரேல் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. தலைநகர் டெல் அவிவில் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தெற்கு காஸாவிற்கு பாலஸ்தீனர்களை இடம்பெயரச் செய்வது என்றும், காஸாவை முழுமையாகக் கைப்பற்றி, அங்கு காலவரையறையின்றி இஸ்ரேல் படைகள் முகாமிட வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.