இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் வீடுகள், உடைமைகள் மற்றும் உறவுகளை இழந்து தவித்து வரும் காசா மக்களுக்கு, அத்தியாவசியப் பொருள்கள் பல்வேறு முகாம்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. காசாவில் உள்ள ரஃபா பகுதியில் செயல்பட்டு வந்த மையத்திற்கு சென்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரே நாளில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சூடுகள் காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்பட 52 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இஸ்ரேல் ராணுவமோ, தங்களுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட நபர்கள் மீது எச்சரிக்கை நடவடிக்கையாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக விளக்கமளித்துள்ளது.
ஆனால், உணவு மையங்களுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த மே மாதம் முதல் தற்போது வரை 798 பேர் உயிரிழந்ததாக ஐ.நா செய்தித் தொடர்பாளர் ரவினா ஷம்தாசானி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பாக, 615 பேர் உதவி மையங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் உயிரிழந்ததாகவும், 183 பேர் உதவி மையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 57 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.