இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிகழ்வது ஒரு போர் அல்ல; உலக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று போர்கள் ஒரே நேரத்தில் நிகழ்கிறது என்கிறார் அமெரிக்கக் கட்டுரையாளரான ஹால் ப்ராண்ட்ஸ்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் எட்டாவது நாளை எட்டியுள்ளது. தற்போதுவரை கிடைத்திருக்கக்கூடிய தகவல்களின்படி, ஈரானில் 70 பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தமாக 270 பேர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்திருக்கின்றனர். ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் மொத்தம் 24 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் நிகழ்வது ஒரு போர் அல்ல; உலக முக்கியத்துவம் வாய்ந்த மூன்று போர்கள் ஒரே நேரத்தில் நிகழ்கிறது என்கிறார் அமெரிக்கக் கட்டுரையாளரான ஹால் ப்ராண்ட்ஸ். அப்படி என்ன மூன்று போர்கள்..
முதலாவது, இஸ்ரேல் - ஈரான் போர் என்பது மத்தியக் கிழக்கை மறுவடிவமைப்பதற்கான ஒரு போர்.. 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, மத்திய கிழக்கு முழுவதுமுள்ள நாடுகளிடையே ஈரான் நட்பைப் பேணி வந்தது. அந்த நாடுகளும் ‘மேற்கத்திய ஏகாதிபத்தியம்’ என அவர்கள் நினைத்ததை எதிர்த்து போராடினார்கள். ஈரானின் செல்வாக்கு மத்திய தரைக்கடல் வரை விரிவடைந்தது. மேலும் மேலும் ஈரான் பலமடைந்தது.
ஈரான் பலமடைவது இருத்தலியல் சார்ந்து நமக்குப் பிரச்னை என்று இஸ்ரேல் நினைத்தது. காரணம், ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகளுக்கு ஈரான் செய்யும் உதவிகள். இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஈரானின் பொருளாதாரம் மற்றும் அதன் ராணுவ பலத்தினைக் குறைக்க இஸ்ரேல் கடுமையாக முயற்சித்து வந்தது..
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் குறிப்பாக இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகு ‘நாங்கள் மத்தியக் கிழக்கை மறுவடிவமைப்போம்’ என நெதன்யாகு தெரிவித்திருந்தது இந்தப் பின்னணியில்தான். அன்றிலிருந்து ஈரான் ஆயுதம் மற்றும் நிதியுதவிகளை வழங்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஹவுதி போன்ற அமைப்புகளின் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் உச்சக்கட்டம்தான் Operation rising lion.. இந்த யுத்தத்தில் வென்றுவிட்டால் ‘மத்திய கிழக்கில் தனது கையை ஓங்க வைக்க முடியும்’ என இஸ்ரேல் நினைக்கிறது.
இரண்டாவது அணு ஆயுத தடை ஒப்பந்ததைக் காப்பாற்றுவதற்கான போர். ஏனெனில், வடகொரியா அணு ஆயுதக் கிடங்கையே உருவாக்கிவிட்டது. ஈரானும் அந்த வழியில் சென்றால் அது மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கும். எனவே அது கூடாது.. இந்த இடத்தில்தான் அமெரிக்கா உள்ளே வருகிறது...
“We must strengthen the NPT so that countries like Iran are not able to break the rules without consequence” (Obama, Prague Speech, 2009)
ஒரு நாடு அணு ஆயுதம் பெற்றுவிட்டால், அதன் எதிரிகள் அதே பாதையில் செல்ல வாய்ப்பு அதிகம் என்பது ஒரு பார்வை... உதாரணத்திற்கு ஈரானையே எடுத்துக்கொள்வோமே.... ஈரான் அணு ஆயுதம் கொண்ட நாடாகிவிட்டால் சவுதி அரேபியா, எகிப்து, துருக்கி போன்ற நாடுகளும் அதைப் பின்பற்ற முயற்சிக்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். இதனால் மத்திய கிழக்கு போன்ற கொந்தளிப்புடனே காணப்படும் பிராந்தியங்களில் புதிய ஆயுதப் போட்டி உருவாகும். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஈரான் அணு ஆயுதம் தொடர்பாக பேசுகையில், “We must strengthen the NPT so that countries like Iran are not able to break the rules without consequence” (Obama, Prague Speech, 2009) என்கிறார்..
ஏற்கனெவே உருவாக்கியவர்களிடம் அணு ஆயுதங்கள் இருக்கலாம்.. புதிதாக ஒருவர் உருவாக்க நினைத்தால் நாங்கள் மொத்தமாக எதிர்ப்போம்....
மூன்றாவது மிக முக்கியமான ஒன்று... ஈரான், வட கொரியா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள் சமீபத்திய ஆண்டுகளில் ஒன்றுக்கொன்று ஆயுத உதவிகளை செய்திருக்கின்றன. இந்த நாடுகள் எல்லாம் Revisionist state அதாவது திருத்தல்வாத நாடுகள் என அழைக்கப்படுகிறது.
சர்வதேச சட்டங்கள், ஐநா சபை போன்ற சர்வதேச ஒழுங்கு அமைப்புகளுக்கு கட்டுப்படாமல், எல்லைகளை மறுவரையறை செய்ய முயலும் நாடுகள்; பிராந்தியங்களின் அதிகார சமநிலைகளை மறு சீரமைக்க முயலும் நாடுகள்; சர்வதேச அரசியல் விதிமுறைகளை மாற்ற முயலும் நாடுகள் என இன்னும் இத்யாதி இத்யாதிகளால் revisionist states நாடுகளைக் குறிக்கலாம். அதாவது, தனது நாட்டின் நலனுக்கு ஏற்ற வகையில் சர்வதேச அமைப்புகளின் விதிகளை மீறுவது, மாற்ற முயல்வது அல்லது திணிக்க முயல்வது....
சில நாடுகள் சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்க விரும்பினால், சில நாடுகள் அவற்றை மாற்ற முயல்கின்றன. எல்லாம் அந்தந்த நாடுகளின் சொந்த நலன்களைப் பொருத்ததுதான். ஆனால், ஒரு முகாமில் இருப்பவர் எதிர்முகாமுக்கு செல்லக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பவர் பாலிடிக்ஸின் ஒரு பகுதிதான் இந்த சித்து விளையாட்டுகள் எல்லாம். எது சரியோ அதுவே தர்மம் என்பார்களே. இங்கு எது சரி என்பதே அவரவர் பார்வைக்கு மாறுபடும்.. அதுதான் பிரச்னை.
இந்த இடத்தில்தான் ஈரான் செயல்படுவதைப் பார்க்க வேண்டும்... குறிப்பாக, ஈரான் நீண்ட காலமாக மத்திய கிழக்கின் இயக்கவியலை மாற்றியமைக்க முயலுவதாக ஒரு பார்வை இருக்கிறது.
ஈராக்குடன் எட்டு ஆண்டு போர், மேற்கத்திய நாடுகளுடனான அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அதன் பொருளாதாரத்தை சுற்றி தொடர்ந்து போடப்பட்ட தடைகள் என இன்னும் சில விஷயங்களெல்லாம் சேர்ந்து - ஈரான் - தற்போதைய சர்வதேச தாராளவாத ஒழுங்கிற்குள் எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்கிறது என்பதை தீர்மானிக்கிறது.
இந்த இடத்தில்தான் சர்வதேச ஒழுங்கைத் தீர்மானிக்கும் அமெரிக்காவைத் தாண்டி பொருளாதாரம் மற்றும் மூலோபாயத் தேவைகளுக்காக ரஷ்யா மற்றும் சீனாவை நோக்கி ஈரான் சாய்ந்துள்ளதாகப் பார்வை இருக்கிறது. Jerusalem Institute for Strategy and Security (JISS) இன் மூத்த ஆராய்ச்சியாளரான அவி டேவிடி, “இஸ்ரேலால் ஈரானுக்கு ஏற்பட்ட சேதம், மறுகட்டமைப்பு மற்றும் ஈரானின் அணு மற்றும் ஏவுகணை திறன்களை மீண்டும் கட்டியெழுப்புவதில் உதவுவதற்கு ரஷ்ய மற்றும் சீன நிறுவனங்களுக்கு சில வாய்ப்புகளை உருவாக்குகிறது” எனத் தெரிவிக்கிறார். “இஸ்ரேலிய தாக்குதல்களை மாஸ்கோ பகிரங்கமாகக் கண்டிப்பது ஒற்றுமையின் வெளிப்பாடு மட்டுமல்ல, கவனமாக சமநிலையான பிராந்திய ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான ஒரு எச்சரிக்கை” எனத் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க தயாராகி வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு வாரங்கள் காலக்கெடு என பூச்சாண்டி காட்டுகிறது. இதற்காக அமெரிக்கா தனது கட்டமைப்புகளை ஒன்று சேர்ப்பதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் மட்டுமல்ல; மத்திய கிழக்கின் அரசியல் வரைபடம், மத்திய கிழக்கின் சமநிலை என பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியிருக்கிறது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் எல்லாம் மத்திய கிழக்கின் புதிய பிராந்திய நடவடிக்கைகளை நிர்மாணிப்பவைகளாகப் பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற பெரிய சக்திகள் தங்கள் சொந்த நலன்களின் அடிப்படையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடுகின்றன. இவ்வளவு விஷயங்கள் பங்குகொள்ளும் ஒரு போரில் உண்மையான எதிரி யார் என்பதைக் கூறுவது சிக்கலானது. ஆனால், அன்றாட வாழ்வுக்கே அல்லலுறும் மக்கள் மீதுதான் எல்லாம் விழப்போகிறது என்பது மட்டும் தீர நிச்சயம்.